ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தால் முன்மொழியப்பட்ட வெளியக பொறிமுறைக்கு பதிலாக உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கான அனைத்துக் கட்சி முயற்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இதுவரையான அரசாங்கங்கள் பாடிய பழைய பல்லவியையே பாடியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி.
நேற்று (19) பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் சப்ரி பேசுகையில், “உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைப்பதற்கு பல கட்சி முயற்சிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இது வெளிப்புற பொறிமுறையைத் தடுக்கும். இவ்வாறான ஒரு பொதுவான பொறிமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு இந்த சபையில் உள்ள அனைத்து தரப்பினரையும் நான் அழைக்கிறேன். நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தங்கள் வழக்குகளைத் தெரிவிக்க முன்வருமாறு நாங்கள் அழைக்க விரும்புகிறோம். நாம் முன்முயற்சி எடுக்காவிட்டால், அது வேறொருவரின் கைகளில் முடிவடையும்.
இன வேறுபாடின்றி தேசத்தைக் கட்டியெழுப்ப உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்களை அரசாங்கம் அழைக்க விரும்புவதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
வெளி சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் அரசாங்கம் நிராகரிப்பதாகவும் அது இலங்கை அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிளவு மற்றும் அரசியல் தன்மைக்கு இந்த தீர்மானம் ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.
“எந்தவொரு வெளிப்புற பொறிமுறைக்கும் இணங்கப்போவதில்லை என்று இலங்கை தெளிவுபடுத்தியது, ஆனால் அதன் அனுசரணையாளர்கள் புதிய கூறுகளை முன்வைத்தனர். நான் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களை சந்தித்து இலங்கையின் நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளேன். எனது முயந்சியின் மூலம் UNHRC தீர்மானங்களில் ஆதரவளித்த பெரும்பாலான நாடுகள் இதயபூர்வமாக இலங்கையியை ஆதரிப்பதும் தெளிவாகிறது. தீர்மானத்தின் சக்திவாய்ந்த ஆதரவாளர்களின் ஆவேசமான மகிழ்ச்சிக்கு அவர்கள் பொருந்தவில்லை என்பதால், வாக்களிக்கும் நேரத்தில் அவர்களால் அதை வெளிப்படுத்த முடியாது. அது இலங்கைக்கும் பொருந்தவில்லை. பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை மற்றும் ஏழு நாடுகள் எதிராக வாக்களித்தன. கடந்த ஆண்டு தீர்மானத்திற்கு வாக்களித்தவர்களில் சிலர் இப்போது சபையில் உறுப்பினர்களாக இல்லை குறிப்பிட்டார்.
இதேவேளை, அமைச்சர் சப்ரியின் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல, அதற்கு திகதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரியான பான் கீ மூனிடம் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை குறுகிய நோக்குடன் உறுதியளித்ததன் காரணமாகவே இந்த விடயத்தில் இலங்கை பாதிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.