கம்பளை, குருந்துவத்தை றோயல் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் மூன்று மாணவர் தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 18ஆம் திகதி காலை 10 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று (19) வெளியேறியுள்ளார்.சம்பவம் தொடர்பாக குருந்துவத்தை பொலிஸில் மாணவன் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தலைவர்கள் மூவரையும் கைது செய்து ‘பி’ அறிக்கை மூலம் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
மூன்று மாணவர்களையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் நீதவான் விடுவித்துள்ளார். அவர்களை அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.