மனைவியை தாக்கியதாக புகார்அளிக்கப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், படப்பிடிப்பு தளத்தில் வைத்து சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, அர்னவ் புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அவருடன் நடிக்கும் கதாநாயகிக்கும், அவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், கர்ப்பிணியான திவ்யா, தனது கணவன் அர்னவ் தன்னை தாக்கியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது போரூர் அனைத்து மகளிர் போலீஸார் அர்னவ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
படப்பிடிப்பின்போது கைது: இந்த வழக்கு தொடர்பாக போரூர் போலீஸார் அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கூந்தம்பாக்கம் ஆர்.வி.கார்டனில் படப்பிடிப்பு இல்லத்தில் இருந்த அர்னவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.