மினுவாங்கொடை, கம்மங்கேதர பகுதியில் தந்தையும், இரண்டு மகன்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது.
பட்டம் ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு தீராத பகையாக நீடிப்பதால் இந்த கொலைகள் நடந்துள்ளன. 5 வருடங்களின் முன்னர் நடந்த இந்த பட்டம் ஏற்றும் சர்ச்சையை தொடர்ந்து, தீராத பகை உருவாகி இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல வருடங்களின் முன்னர், பாணந்துறையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் தொப்பி தொடர்பாக ஏற்பட்ட மோதல் பல காலமாக நீடித்தது. இந்த தொடர் மோதலில் பதினேழு பேர் கொல்லப்பட்டனர். அப்போது பாணந்துறையில் இரண்டு சக்திவாய்ந்த பாதாள உலக குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் அக்கால கட்டத்தில் இலங்கையில் ஒரு பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக மாறியது.
அந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையில் இருந்து மீண்டும் ஒரு கொலைகளின் சங்கிலித் தொடர் தோன்றியுள்ளது.
மினுவாங்கொடை பகுதியில் 2017ஆம் ஆண்டில் இந்த பட்டம் ஏற்றும் சர்ச்சை தோன்றியது. அது இரண்டு குடும்பங்களிற்கிடையிலான பகையாக உருவாகி, தொடர் கொலைகள் நடந்து வருகின்றன. இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி தந்தையும், இரண்டு மகன்களும் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த சர்ச்சை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தந்தையையும், இரண்டு மகன்களையும் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் 04 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு பட்டம் ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொல்லப்பட்ட இளைஞனின் தந்தையும், டுபாயில் இருந்து இந்தக் கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற பாதாள உலகக் குற்றவாளியின் மூன்று அடியாட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது டுபாயில் உள்ள பாதாள உலகக்குழு தலைவன் ஒருவரே இந்த கொலைகளிற்கான உத்தரவை தனது அடியாட்களிற்கு வழங்கியுள்ளார். தனது கிராமத்தைச் சேர்ந்த நண்பரின் கோரிக்கையை ஏற்று, இந்த கொலை உத்தரவை பாதாள உலக தலைவன் வழங்கியுள்ளார்.
மினுவாங்கொடை முக்கொலையை மேற்கொண்டவர் விமானப்படையிலிருந்து தப்பியோடிய மகேஸ் என்பவர். அவர் கொலை ஒப்பந்தத்திற்காக ரூ.20 மில்லியன் பணம் பெற்றுள்ளார்.
இந்த கொலைகள் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கிறது.
இந்த கொலைச் சங்கிலி 2017 ஆம் ஆண்டில் ஒரு பட்டம் ஏற்றும் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஒரு தந்தை மற்றும் ஒரு மகன் கொல்லப்பட்டதில் இருந்து தொடங்குகிறது. இந்த சம்பவத்தில் லால் பிரேமசிறி மற்றும் அவரது மகன் சூரஜ் தனஞ்சய ஆகியோர் கொல்லப்பட்டனர்.
பட்டம் பறக்கும் போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு குழுவினர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் உயிரிழந்துள்ளனர்.
லால் பிரேமசிறி மற்றும் சூரஜ் தனஞ்சய ஆகியோரை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகலஹண்டி லக்ஷ்மன் குமார் (50), அவரது மூத்த மகன் சுரேஷ் ஜீவந்த (24) மற்றும் அவரது இளைய மகன் ரொஷான் மதுவந்த (22) ஆகியோர் கடந்த 6 ஆம் திகதி வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
முன்னதாக 2018 இல், இந்த கொலைச் சங்கிலியின் இணைப்பாக ஜஸ்டின் ரத்னசீல (65) என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர், தற்போது கொல்லப்பட்ட லக்ஷ்மன் குமாரின் சகோதரர் ஆவார்.
ஜஸ்டின் ரத்னசீலவை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரில் சுத்தா என்ற லக்ஷித லக்ஷன் என்பவரும் ஒருவர். சுத்தா 2021 இல் கொல்லப்பட்டார். சுத்தா கொலைச் சந்தேகத்தின் பேரில், கடந்த 6ஆம் திகதி கொல்லப்பட்ட தந்தை மற்றும் இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். சுத்தா கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தந்தையும், இரண்டு மகன்களும் கொல்லப்பட்டது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிசாரின் விசாரணையின்படி, இந்த மூவர் கொலையில் பிரதான சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுத்தாவின் தந்தையாவார். இவர் 2017 பட்டச் சர்ச்சையில் மரண சங்கிலியை ஆரம்பித்து படுகொலை செய்யப்பட்ட லால் பிரேமசிறியின் சகோதரர் ஆவார்.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற 6ஆம் திகதி காலை மினுவாங்கொடையில் உள்ள வீட்டுக்கு பொலிஸ் சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவர்களும் வந்துள்ளனர். வீட்டில் துப்பாக்கிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீடு முழுவதும் சோதனை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி அந்த குழுவினர் வீட்டை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் மூவரும் வீட்டின் உரிமையாளரின் மனைவி மற்றும் மகளை ஒரு அறைக்கு சென்று கதவை மூடுமாறு கட்டளையிட்டனர். பின்னர், தந்தையையும், மகன்களையும் முழந்தாளில் இருத்தி, சுட்டுக் கொன்றனர்.
இரண்டு மகன்களான சுரேஷ் ஜீவந்த மற்றும் இளைய மகன் ரொஷான் மதுவந்த ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தந்தை லக்ஷ்மன் குமார் மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பொலிசாரின் விசாரணையை தொடர்ந்து, படல்கம மடம்பெல்ல பகுதியில் கொலையாளிகள் வந்த வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாகனம் மினுவாங்கொடை பல்லமாவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது. சில மாதங்களுக்கு முன்பு வாடகை அடிப்படையில் வாகனம் வழங்குபவருக்கு வாகனத்தை கொடுத்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி இளைஞர் ஒருவர் வந்து இந்த வாகனத்தை வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.
கொல்லப்பட்ட தந்தை மற்றும் இரண்டு மகன்களும், பட்டச் சர்ச்சையின் முதல் கொலைச் சம்பவத்திற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்.
இந்த கொலை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




