கௌஷியின் பேஸ்புக்கிற்கு அறிமுகமற்ற புதிய கணக்கொன்றிலிருந்து வந்த புதிய மெசேஜை திறந்து பார்த்தாள். அது ஒரு புகைப்படம். ஒரு நொடிதான். கௌஷியின் மூளைக்குள் வெடிகுண்டு வெடித்தது. உடலெல்லாம் நடுங்க, நிலைகுலைந்து போனாள்.
காரணம், அந்த மெசேஜில் அனுப்பப்பட்டது கௌஷியினுடைய அரை நிர்வாணப் புகைப்படம்.
உலகமே இடிந்து விழுந்ததை போல கௌஷி உணர்ந்தாள். கைத்தொலைபேசியை அருகில் வைத்து விட்டு பிரமை பிடித்தவளை போல உட்கார்ந்திருந்தாள். அவளால் சிந்திக்க முடியவில்லை.
அவளது பேஸ்புக்கில் புதிய மெசேஜ்கள் சில அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.
கொலைக்களத்திற்கு செல்லும் அச்ச மனநிலையுடன் புதிய மேசேஜை கவனித்தாள். தனது நிர்வாணப் படங்களை அனுப்பிய உமேஷா டி. ஜயரத்ன என்ற பெயருடைய பேஸ்புக் கணக்கிலிருந்தே மீண்டும் தகவல் வந்திருந்தது.
வேறு எந்த வழியும் தோன்றாமல், உமேஷா டி. ஜயரத்னவிற்கு ஒரு பதில் அனுப்பினாள் கௌஷி. “யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என கேட்டாள்.
அடுத்த நொடியே மறுமுனையிலிருந்து பதில் வந்தது.
“உன்னுடைய நல்ல நிர்வாண போட்டோக்கள் என்னிடம் உள்ளன. ஒன்றை மட்டும் அனுப்பினேன். நான் சொல்வது போல் செய்யவில்லை என்றால், எல்லா போட்டோவையும் எல்லாரும் பார்க்கும்படி அப்லோட் செய்துவிடுவேன்” என்று பதில் வந்திருந்தது.
அந்த எச்சரிக்கையின் விபரீதம் கௌஷிக்கு புரிந்தது. தனது அனைத்து நிர்வாணப் புகைப்படங்களும் பகிரங்கமாகிவிட்டால், சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தன் உயிரையே மாய்க்க நேரிடும் என்பது அவளுக்குத் தெரியும்.
தனது நிர்வாணப் புகைப்படங்கள் வெளியில் யாரிடமோ சென்றுவிட்டது என்பது அவளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்து விட்டது. பேஸ்புக் நண்பனொருவருக்கு அனுப்பிய நிர்வாணப் புகைப்படங்கள் இப்பொழுது வில்லங்கமாகியுள்ளது அவளுக்கு புரிந்தது.
தொழில்நுட்பத்தில் அவ்வளவு பரிச்சயமற்ற கல்விப்பொது தராதர உயர்தர மாணவன் ஒருவனிடம் ஐபோன் ஒன்று கிடைத்தது. அதன்பின், தொழில்நுட்பத்தில் அசகாய சூரனாகி, 300 இளம்பெண்களை வலையில் விழுத்தி, அரங்கேற்றிய மோசடியை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
அண்மையில் இலங்கையை உலுப்பிய சம்பவத்தின் பின்னணியை விபரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கௌஷி அழகிய இளம் பெண். கொழும்பிற்கு அண்மையிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
பாடசாலை நேரம் முடிந்ததும், பேஸ்புக்கில் அவளது முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. கௌஷியின் அழகு, மேற்கத்திய பாணி ஆடைகளுடன் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்களினால் விரைவிலேயே பேஸ்புக் பிரபலமாகி விட்டாள். அவளுக்கு நிறைய பேஸ்புக் நண்பர்கள்.
அந்த நண்பர்களில் ஒருவருடன் கௌஷி மிகவும் நெருக்கமாகிவிட்டாள். அந்த நண்பர் மருத்துவர். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. கௌஷிக்கும் அது தெரியும். அதையும் கடந்து, கௌஷியும், மருத்துவரும் பேஸ்புக்கில் நெருக்கமாகினார்கள்.
இருவரும் தங்கள் நிர்வாணப் புகைப்படங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இப்படி, மருத்துவருக்கு அனுப்பிய அரைநிர்வாணப் புகைப்படம் ஒன்றே, உமேஷா டி. ஜயரத்ன என்ற பேஸ்புக் பக்கத்திலிருந்து, அவளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவருக்கு அவள் தனது முழு நிர்வாணப் புகைப்படங்களும் அனுப்பி வைத்திருந்தாள். அதை நினைத்துத்தான் கௌஷி பயந்தாள்.
வேறு எந்த வழியுமில்லாமல், உமேஷா டி. ஜயரத்ன என்ற பேஸ்புக்கிற்கு இப்படியொரு பதில் அனுப்பினாள்.
“சரி, நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாய்”.
அடுத்த சில நொடிகளிலேயே பதில் வந்தது.
“என்னிடமுள்ளவை உனது பழைய நிர்வாணப் புகைப்படங்கள். புதிதாக எடுத்த நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி விடு“ என்ற பதிலைப் படித்த கௌஷி நிலைகுலைந்து விட்டாள்.
மிரட்டலிற்கு பயந்து நிர்வாணப் படங்களை அனுப்பினால், இது இன்னும் விபரீதத்தில் முடியுமென்பது கௌஷிக்கு தெரியும், ஆனாலும், மறுமுனையில் இருப்பவரின் கட்டுப்பாட்டிலேயே தான் இருப்பதும் அவளுக்கு தெரியும்.
மறுமுனையில் இருப்பவருடன் சமரசத்திற்கு வர கௌஷி முயன்றாள். நிர்வாணப் படங்களை அனுப்புவதற்கு பதிலாக ஒரு தொகை பணத்தை தர தயாராக உள்ளதாக தகவல் அனுப்பினார்.
மறுமுனையிலிருந்து வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பதில் வந்தது.
“எனக்கு பணம் தேவையில்லை. நீ புகைப்படங்களை அனுப்பினால், நான் உனது நிர்வாணப் படங்களை வெளியிட மாட்டேன். அப்படி அனுப்பவில்லையென்றால், உன்னுடன் நடந்த சற்றிங் முழுவதையும், உன் காதலன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன்” என்று மிரட்டல் பதில் வந்தது.
பேஸ்புக் காதலனான மருத்துவருக்கு அனுப்பிய புகைப்படங்கள் எப்படி வேறொருவரிடமிருந்து திரும்பி வருகிறது . ஒரு வேளை வைத்தியர்தான் இதன் பின்னணியில் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் விசாரித்தாள்.
விடயத்தை கேட்டதும், மருத்துவருக்கு உதறத் தொடங்கி விட்டது. மனைவிக்கு விடயம் தெரிந்தால், தனது குடும்பம் குலைந்து விடும் என அழ ஆரம்பித்து விட்டார்.
இதன் பின்னணியில் மருத்துவரும் இல்லையென்பது கௌஷிக்கு புரிந்தது.
மருத்துவருடனான சற்றிங் விபரங்கள் வெளியானால், தனக்கு அவமானம் மட்டுமல்ல, மருத்துவரின் குடும்பமும் குலையும் என்பது கௌஷிக்கு புரிந்தது.
கௌஷி தப்பிக்க எந்த வழியும் தென்படவில்லை. அவளிற்கு இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன.
உன்னிடம் இருக்கும் புகைப்படங்களை வெளியிடு, எனக்கொன்றும் பிரச்சனையில்லையென கூறிவிட்டு, எது வந்தாலும், சமாளித்துக் கொண்டிருப்பது ஒன்று.
இரண்டாவது, புதிய நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புவது.
கௌஷி, இரண்டாவது முடிவை எடுத்தாள்.
புதிதாக சில நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து அனுப்பினாள்.
இத்துடன், எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து விட்டன என அவள் நிம்மதிப் பெருமூச்சு விட, ஜெயரத்னவிடமிருந்து மீண்டும் மெசேஜ். அதிலும் புதிய நிர்வாணப் படங்களை அனுப்பும்படி மிரட்டல்.
இப்படியாக, “போர்“ அடிக்கும் போதெல்லாம் கௌஷியிடம் நிர்வாணப்படம் கேட்க ஆரம்பித்தார் மறுமுனை நபர்.
கௌஷிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மருத்துவருடனும் ஆலோசித்து விட்டு, இறுதியில் குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் முறையிட்டாள் கௌஷி.
♦♦♦♦♦♦♦
திருகோணமலையை சேர்ந்தவர் பிரியங்கா. அண்மையில்தான் அவருக்கு திருமணமானது. கணவன் பொறியியலாளர். தற்போதைய பொருளாதர நெருக்கடியில், பிரியங்காவும் சம்பாதிக்க விரும்பினாள்.
பிரியங்கா ஒரு பேஸ்புக் பிரியை. நாளாந்தம் பல மணித்தியாலங்களை பேஸ்புக்கில் செலவிடுவாள்.
ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக் கொண்டிருந்த போது, விளம்பரமொன்று கண்ணில்ப்பட்டது. வீட்டிலிருந்தபடியே ஒன்லைன் வழியாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா பணம் சம்பாதிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உமேஷா டி. ஜயரத்ன என்ற பேஸ்புக் கணக்கு அந்த விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.
வேலையை எதிர்பார்க்கும் பிரியங்கா, உமேஷா டி. ஜயரத்னவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்.
அந்த மெசேஜிற்கு வந்த பதில், தயவு செய்து முதலில் அனைத்து பயோடேட்டாவுடன் விண்ணப்பத்தை அனுப்புங்கள் என்பதே.
மாதம் ஒரு இலட்சம் ரூபா சம்பாதிக்கும் இந்த வேலையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தன் கணவரின் பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்தாள்.
விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு, சில நாட்களுக்குப் பிறகு பதில் வந்தது.
“எங்களிடம் தற்போது சில பரிமாற்ற வேலைகள் மட்டுமே உள்ளன. நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் முழு புகைப்படத்தையும் எங்களுக்கு அனுப்பவும். நீங்கள் தகுதியானவராக இருந்தால், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். 14 இலட்சம் ரூபா சம்பளம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மாதம் 1 இலட்சம் ரூபா சம்பாதிக்கும் வேலைக்கு ஆசைப்பட்ட பிரியங்காவிற்கு, 14 இலட்சம் ரூபா சம்பளத்தில் வேலை லட்டுப் போல வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் திளைத்தாள்.
முதலாவது அறிவுத்தல்படி, தனது முழு புகைப்படம் ஒன்றை அனுப்பினாள்.
சிறிது நேரத்தில் மறுமுனையிலிருந்து பதில் வந்தது. “தயவு செய்து மன்னிக்கவும். உங்களுடைய இந்த புகைப்படத்தை எங்களால் தேர்ந்தெடுக்க முடியாது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது..
மீண்டும் ஒரு புகைப்படத்தை அனுப்பினாள்.
அதுவும் நிராகரிக்கப்பட்டது. அவள் உள்ளாடையில் இருக்கும் புகைப்படத்தை அனுப்புமாறு பதில் வந்தது. ஏற்கனவே கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பிரியங்கா, அதை பற்றி இருமுறை யோசிக்கவில்லை. 14 இலட்சம் ரூபா வேலையை எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்ற அவசரத்தில், உள்ளாடையுடன் நின்று இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்து பேஸ்புக் மூலம் அனுப்பினாள்.
அடுத்து வந்த செய்தி, “தயவு செய்து மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை அனுப்பி வையுங்கள்“.
பிரியங்காவிற்குள் சங்கடங்களும், அச்சமும் தோன்றியது. ஆனால், 14 இலம்சம் ரூபா ஆசை அவற்றை அடங்க வைத்தது. தனது முகம் தெரியாத விதமாக, மேலாடை இல்லாத புகைப்படத்தை எடுத்து அனுப்பினாள்.
அந்த புகைப்படத்தை ஏற்க முடியாதென்றும், முகம் தெரியும் விதமாக நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பவும். இல்லையெனில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என பதில் வந்தது.
அத்துடன், அவளது தயக்கத்தை போக்கும் பல செய்திகளும் அடுத்தடுத்து வந்தன. “அடடா, இவ்வளவு தூரம் வந்துவிட்டு. கடைசி இடத்தில் தடுமாறுகிறீர்களோ, ஒரு புகைப்படத்தை அனுப்பி 14 இலட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேருங்கள், நீங்கள் ஒரு வெளிநாட்டவரால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளீர்கள். நான் அவருக்கு போட்டோவை காட்டியதும், உடனே டிலீட் செய்து விடுவேன், என்னை நம்புங்கள், நானும் ஒரு பெண்தான். உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள் என தொடர்ந்து தகவல்கள் வந்தன.
என்றாலும், நிர்வாணத்தை காட்டி வேலை தேட வேண்டுமென பிரியங்கா விரும்பவில்லை. வேலை வேண்டாமென பதில் அனுப்பினாள்.
மறுமுனையில் சுருதி மாறியது. இதுவரை மயிலிறகால் தடவிக் கொண்டிருந்தவர், மிரட்ட ஆரம்பித்தார்.
“நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு நிர்வாணப் புகைப்படத்தை அனுப்பவில்லை என்றால், எங்களிடம் உள்ள உங்களது மற்ற புகைப்படங்களை கசிய விடுவோம். உங்கள் கணவருக்கும் அனுப்புகிறேன். அவரது நண்பர்களுக்கும் அனுப்புகிறேன். பின்னர் என்ஜினியர்க் கணவர் என்ன செய்கிறார் என பார்ப்போம்.” என தகவல் வந்தது.
தொடர்ந்து, அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மிரட்டல்கள் வந்தன.
தனது அரைநிர்வாணப் புகைப்படங்களை கணவனுக்கும், அவரது நண்பர்களிற்கு அனுப்பினால் நிலைமை விபரீதமாகி விடும் என உணர்ந்தாள்.
நிலைமையை சமாளிக்க வழி தெரியாமல், மேலாடையில்லாமல் புகைப்படங்கள் எடுத்து உமேஷா டி. ஜயரத்னவின் கணக்கிற்கு அனுப்பினாள்.
இந்த பிரச்சனை இத்துடன் முடிந்து விடும் என்றுதான் பிரியங்கா நினைத்தாள். ஆனால், அதன் பின்னர்தான் விவகாரம் புதிய தொடக்கத்தை எடுத்தது.
அவளுடைய முழு நிர்வாண புகைப்படத்தை அனுப்பும்படியும், இல்லையெனில், அரை நிர்வாணப் படங்களை வெளியிடுவேன் என்றும் உமேஷா டி. ஜயரத்னவின் பேஸ்புக்கிலிருந்து மிரட்டல், வந்தது. அந்த மிரட்டல்கள் எல்லைமீறிச் சென்றதால், பிரியங்கா குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்தாள்.
♦♦♦♦♦♦♦
இந்த விபரணத்தில் குறிப்பிட்ட இரண்டு பெண்களுமே பேஸ்புக்கிற்கு அடிமையானவர்கள்தான். ஆரம்பத்தில் குறிப்பிட்ட கௌஷி, ஒருநாள் பேஸ்புக்கில் நேரத்தை கழித்துக் கொண்டிருந்த போது “அழகான ஆடைகளின் டிசைன்” என்ற சிங்களத்திலான பேஸ்புக் பக்கத்தை அவதானித்தாள்.
பெண்களின் கவனத்தை ஈர்க்கும் விதவிதமான ஆடைகளை விற்பனை செய்வதாக குறிப்பிட்ட அந்த கணக்கில் நுழைந்ததும், அதன் துணைக் கணக்கான “அழகான கவுன் டிசைன்” பக்கத்திறகு ஈர்க்கப்பட்டாள்.
அந்த பகுதியில் பெண்களின் புகழ்பெற்ற உள்ளாடை நிறுவனங்களின் தயாரிப்புக்கள் ஒன்லைன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சில ஆடைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டன. சாதாரணமாக கடைகளில் 600 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளாடைகள் 100 ரூபாய்க்கும் குறைந்த விலையில் அங்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் 10 உள்ளாடைகளை வாங்க ஓர்டர் செய்தார்.
அந்த ஓர்டர்கள் கிடைத்துள்ளதாக அவளது மின்னஞ்சலிற்கு தகவல் வந்தது.
அதேசமயத்தில் அவளது பேஸ்புக்கிற்கும் ஒரு செய்தி வந்தது. அதில், “நீங்கள் உங்கள் ஓர்டரை உறுதிப்படுத்த வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓர்டரை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கௌஷி மெசேஜ் அனுப்பினாள்.
மொபைல் போனில் OTP குறியீடு கிடைத்ததும் ஓர்டரை உறுதிப்படுத்த வேண்டும் என பதில் வந்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அவளது கைத்தொலைபேசி குறுஞ்செய்தியில் OTP குறியீடு வந்தது.
தான் உள்ளாடைகளிற்கு ஓர்டர் செய்ததை உறுதிசெய்ய பெற்ற OTP குறியீடே வந்துள்ளதாக அவள் நினைக்கிறாள். அதனால், அந்த OTP குறுஞ்செய்தியில் அதிக கவனம் செலுத்தவில்லை. தனது ஓர்டரை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில், OTP இலக்கத்தை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பினாள்.
உள்ளாடை வாங்கும் ஓர்டரை உறுதி செய்து சில வாரங்கள் கடந்தும், ஓர்டர் செய்யப்பட்ட உள்ளாடைகள் கௌஷிவிற்கு கிடைக்கவில்லை. அவள் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவள் ஓர்டருக்காக எந்தப் பணமும் செலுத்தவில்லை.
கௌஷி ஓர்டர் செய்ததிற்கு பணம் செலுத்தவில்லைத்தான். அதனால் கௌஷிக்கு எந்த பாதிப்பும் இல்லையென சொல்ல முடியாது.
காரணம், கௌஷியின் நிர்வாணப்படங்களை பெற, அடையாளம் தெரியாத அந்த நபர் வைத்த பொறி இதுதான்.
♦♦♦♦♦♦♦
குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இரண்டு பெண்பளும் முறையிட்டதும், டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்தினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிசாரின் முதற்கட்ட தடயவியல் விசாரணையில், இந்த இரண்டு குற்றங்களும் இரண்டு வெவ்வேறு தரப்புக்களால் மேற்கொள்ளப்படவில்லை, ஒரு தரப்பினரே மேற்கொண்டுள்ளனர் என்பதை கண்டறிந்தனர்.
விரைவிலேயே இந்த முகநூல் விளையாட்டை பொலிசார் முழுமையாக அடையாளம் கண்டனர்.
பேஸ்புக்கில் பெண்களை குறிவைத்து இயக்கப்பட்ட உமேஷா டி. ஜயரத்ன, அழகான கவுன் டிசைன் பேஸ்புக் பக்கங்களை இயக்கியவர் ரம்புக்கனை, பின்னவல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைதானவர் ஒரு பாடசாலை மாணவர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட போது, கல்விப் பொது தாராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேற்றிற்காக காத்திருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவரது பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன.
அவர் அனைத்து பாடங்களிலும் பெயிலாகியிருந்தார்.
கைதான மாணவனின் தந்தை கட்டிட தொழிலாளி. தாயார் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தார். கைதான மாணவனிற்கு ஒரு மூத்த சகோதரியுள்ளார். அவர் திருமணமாகி பிறிதொரு இடத்தில் வசித்தார்.
உயர்தர பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த காலப்பகுதியே மாணவனை தவறான பாதையில் செல்வதற்கான அவகாசத்தை அளித்தது.
ரம்புக்கனைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு செல்ல ஆரம்பித்த அந்த மாணவன், அங்கு சூதாட்டத்தின் மூலம் அப்பிள் மொபைல் போன் ஒன்றை சம்பாதிக்கிறார். அந்த அப்பிளை கையில் பிடித்தது முதல் வழிதவறிச் செல்ல ஆரம்பித்தார்.
அதுவரை, நவீன ஸ்மார்ட்ஃபோனை சரியாக கையாளத் தெரியாத, பேஸ்புக்கை தவிர வேறெந்த சமூக ஊடக தொழில்நுட்பத்தையும் அறிந்திராத அந்த மாணவன், மிகக் குறுகிய காலத்தில் கையடக்கத் தொலைபேசியில் எவ்வாறு சிறப்பாகச் செயற்படுவது என்பதைத் தானே கற்றுக்கொண்டார்.
திடீரென தோன்றிய ஒரு யோசனையால் “அழகான ஆடை டிசைன்” முகநூல் கணக்கைத் திறந்துள்ளார். அந்த கணக்கில் அதிக பெண்கள் நுழைய ஆரம்பித்ததும், அவர்களை ஏமாற்றும் யோசனை தோன்றியுள்ளது.
கடையில் அதிக பெறுமதியான பொருட்களை குறைந்த தொகைக்கு தருவதாக விளம்பரப்படுத்தினால், பெண்கள் மிகவும் சுலபமாக ஏமாற்றலாம் என்பதை நன்றாக புரிந்து கொண்டார். அதனால் தான் பெண்கள் அதிகம் விரும்பும் பிரபல பிராண்ட்களின் தயாரிப்பான பெண்களின் உள்ளாடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக போலி கணக்கு மூலம் விளம்பரப்படுத்தினார்.
அவரது போலி பேஸ்புக் கணக்கில் ஏமாந்த பல பெண்கள் அந்த கணக்கு மூலம் குறைந்த விலையில் உள்ளாடைகளை வாங்க ஓர்டர் செய்திருந்தனர். அவர்களில் கௌஷியும் ஒருவர்.
உள்ளாடைக்கு ஓர்டர் செய்ததும், OTP குறியீடு மூலம், அந்த யுவதிகளின் பேஸ்புக் பாஸ்வேர்ட்டை அந்த மாணவன் திருடினார்.
அதற்கு அவர் ஒரு அற்புதமான தொழில்நுட்ப சூழ்ச்சியைப் பயன்படுத்தியிருந்தார். உள்ளாடைகளிற்கு ஓர்டர் செய்த பெண்களின் OTP இலக்கத்தை கேட்கும் முன், ஓர்டர் செய்த பெண்ணின் பேஸ்புக்கிற்குள் ஊடுருவி, பாஸ்வேர்டை மறந்துவிட்டதாக ஒரு குறிப்பை அனுப்பியுள்ளான். பாஸ்வேர்ட்டை உறுதி செய்ய, ஓர்டர் செய்த யுவதியின் கைத்தொலைபேசிக்கு நிறுவனத்திடமிருந்து OTP இலக்கம் அனுப்பப்படும்.
மாணவன் ஆடிய ஆட்டத்தை புரிந்து கொள்ளாத பெண்கள், அந்த OTP இலக்கம் ஓர்டர் கென்ஃபர்மேஷன் கோட் என நினைத்து, மாணவனிற்கு அந்த இலக்கத்தை ஃபோர்வேர்ட் செய்துள்ளனர். அந்த குறியீடு கைக்கு கிடைத்தவுடனேயே பெண்களின் பேஸ்புக்கை ஹக் செய்து அங்குள்ள அனைத்து தரவுகளையும் டவுன்லோட் செய்து விடுவான்.
இப்படியே இலட்சக்கணக்கான பெண்கள் அவனது வலையில் சிக்கினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இளம் பெண்கள். அவர்களில் ஏராளமான பாடசாலை மாணவிகளும் உள்ளனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவனிடம் ஏமாந்தவர்களில், பதுளை இளைஞன் ஒருவரும் உள்ளார். அவரும் பெண் பெயரில் போலி பேஸ்புக் பக்கத்தை இயக்கியவர்.மாணவனும், பதுளை இளைஞனும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டுள்ளனர். இருவருக்கும் அது தெரிந்திருக்கவில்லை.
அதுமட்டுமின்றி, உமேஷா டி. ஜெயரத்ன என்ற தனது பேஸ்புக் கணக்கின் ஊடாக நூற்றுக்கணக்கான இளம் பெண்களை சிக்க வைத்துள்ளார். அவர்களில் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சிறப்பு சித்தியடைந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவி ஒருவரும் இருந்தார். பெற்றோருக்கு பாரமாக இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்று நினைத்து ஒன்லைன் வேலை தேடி இந்த வலையில் சிக்கியுள்ளார்.
கைதான மாணவனினால் ஏமாற்றப்பட்ட இளம் பெண்கள், மாணவிகளின் எண்ணிக்கை 300க்கும் அதிகம். கைதான மாணவன் பயன்படுத்திய கைத்தொலைபேசியை டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்த போது இது தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்த கையடக்க தொலைபேசியில் ஏமாற்றப்பட்ட யுவதிகள், மாணவிகளின் ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டன. இதில் ஒருவரின் பல புகைப்படங்களும் உள்ளன. பாடசாலை சீருடையில் பல மாணவிகளின் ஆபாய புகைப்படங்களும் அதில் உள்ளன.
கைதான மாணவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டும் நோக்கில், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்த 300 பேரில் 30 பேர், பேஸ்புக்கில் காதலர்கள் அல்லது ஈர்ப்புள்ளவருடன் தமது நிர்வாணப் படங்களை பகிர்ந்துள்ளனர். அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை மாணவன் கைப்பற்றிய பின்னரே, மிரட்டலில் ஈடுபட்டுள்ளான். இந்த 30 யுவதிகள், மாணவிகள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களையும் குற்றப் புலனாய்வுதுறையினர் பெற்றுள்ளனர்.
மாணவனின் வலையில் சிக்கி நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்களில் பெரும்பாலானவர்கள், போலி விளம்பரங்களில் ஏமாந்த, ஒன்லைன் வேலை தேடுனர்களே.
மாணவன் தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது. உமேஷா டி. ஜயரத்ன மற்றும் அழகான ஆடை டிசைன் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் சிக்கிய பெண்கள், சிறுமிகள் மற்றும் பாடசாலை மாணவிகள் இருப்பின் dir.cid@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கும்படி, குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.