தாயாரின் செயற்கை தலைமுடி கழுத்தை இறுக்கியதால் 8 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்குருவத்தோட்ட, மாபோகட பிரதேசத்தில் வசித்து வந்த தரம் 4 இல் கல்வி கற்கும் சேனாதிர பத்திரகே ருவன் மதிஷ பெரேரா என்ற சிறுவனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது சிறுவன் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளதுடன், தாயார் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் தையல்காரராகப் பணிபுரியும் தந்தை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்து அறைக்குச் சென்று பார்த்தபோது சுவரில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடுமையாக முயற்சித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறுவன், தனது தாயின் செயற்கை தலைமுடியை கழுத்தில் கட்டிக் கொண்டு, புத்தகப்பையை தொங்கவிட அறையப்பட்டிருந்த ஆணியில் மறுமுனையை தொங்க விட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
விளைாயடிக் கொண்டிருந்த போது விபரீதமானதா அல்லது சிறுவன் உயிரை மாய்த்தாரா என்பது உறுதியாகவில்லை.
சிறுவன் வசித்த வீட்டிற்கு அருகாமையில் உள்ள நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டின் கொங்கிரீட் தூணில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாகவும், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை சிறுவன் பார்த்ததாகவும், மறுநாள் கம்பியில் தூக்கில் தொங்கி விளையாடியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.