இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெரோயினை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், 6 பேரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த படகை மடக்கி சோதனையிட்ட அதிகாரிகள், 1200 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயினை பறிமுதல் செய்து, கடலில் குதித்து தப்ப முயன்ற 6 பேரை கைது செய்தனர்.
போதைப்பொருள் தடுப்புதுறை அதிகாரிகளும், இந்திய கடற்படையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் சிக்கின.
ஈரானிய மீன்பிடிப் படகிலேயே ஹரோயின் கடத்தி வரப்பட்டது. கைதான 6 பேரும் ஈரானியர்கள்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் குழுதான் காரணம் என்று NCB துணை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் சிங் கூறினார்.
பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்படும் போதைப்பொருளை வெளிக் கடலில் ஈரானிய படகுகளில் மாற்றுகின்றனர். இந்திய கடற்படையை ஏமாற்றவே இவ்வாறு செய்கின்றனர்.
ஈரானின் மக்ரான் கடற்கரையில் இருந்து குழுக்கள் கப்பல்கள் மற்றும் படகுகளில் வந்து இலங்கை அல்லது மக்ரான் கடற்கரைக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற பின், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவது வழக்கம் என அவர் தெரிவித்தார்.
கடற்படையினர் நெருங்கியதும், ஈரானியர்கள் தமது படகை மூழ்கடித்தனர். நீர்ப்புகா பிளாஸ்டிக் கவர்களில் 200 பாக்கெட்டுகளில் ஹெரோயின் இருந்தது. அது இலங்கை படகுக்கு கொடுக்கப்படவிருந்தது.