ஆனமடுவ, திபுல்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு வயது குழந்தையொன்று கடத்திச் செல்லப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்டு, உரப்பையில் சுற்றப்பட்டு, பற்றைக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அதே கிராமத்தில் வசிக்கும் போதைப்பொருளுக்கு அடிமையான 25 வயதுடைய நபர் ஒருவரே திபுல்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் தனது தாயின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட குழந்தையை வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள திபுல்வெவ ஏரிக்கரைக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஒருவித துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும், பின்னர் குழந்தையில் கைகால்களை கட்டி, உரப்பையினால் சுற்றி, ஏரிக்கரையிலுள்ள பற்றைக்காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாயார், தனது வீட்டிற்கு முன்னால் உள்ள சந்தையில் இருந்த போது சந்தேக நபர் குழந்தையை கடத்திச் சென்றதாக கூறுகிறார்.
குழந்தை காணாமல் போனதை அறிந்த தாய், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து குழந்தையைத் தேடி, மீட்டெடுத்ததாகக் கூறினார்.
இதனிடையே, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் திபுல்வெவ பிரதேசத்தில் உள்ள பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆனமடுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களால் தாக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெரும் பிரயத்தனத்துடன் ஆனமடுவ பொலிஸாரிடம் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.