மறைந்த பிரபல பாதாள உலக தலைவர் மொஹமட் நௌபரின் மகன் மற்றும் உறவினர்கள் போதை மருந்து கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தது.
அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வரம்பற்ற சொத்துக்களை பயன்படுத்துவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொட்டா நவ்பரின் மகன் 26 வயதான மொஹமட் நவ்பர் நியாஸ் நிஃப்ரான், புதுக்கடை பகுதியில் 150 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றை கொள்வனவு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
“இவ்வளவு சிறிய வயதில் அவர் எப்படி இவ்வளவு சொத்துக்களை சம்பாதித்தார்?” என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொட்டா நௌபர் இறப்பதற்கு முன்னர் அவரது மகனுக்கு இந்த சொத்து இருந்ததா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.