நாமல்ராஜபக்ஷ போன்ற பல பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்காத போதும், அரசின் பல சலுகைகளை அனுபவித்து வருவது நேற்று (6) அம்பலமானது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறியை தாக்க முற்பட்ட போது, ஆளும்தரப்பின் வண்டவாளம் வெளியில் தெரிந்தது.
அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் விஜேசேகரவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போதே இந்த விவகாரம் வெளிப்பட்டது.
“நாம் ஒரு நெருக்கடியில் உள்ளோம் என்பதால், பிரீமியம் அதிகம் என்று வெளிப்படையாகச் சொன்னோம். மறைக்க எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து நான் இந்த சபையில் வெளிப்படையாகப் பேசியுள்ளேன். இப்போது நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து ஆறு மாதங்கள் ஆகிறது. நீங்கள் இன்னும் குடியிருக்கும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவில்லை. முதலில் அங்கிருந்து வெளியேறுங்கள். நீங்கள் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினால், தயவுசெய்து இந்த சலுகைகளை விட்டுவிடுங்கள், ”என்று அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலங்கை மின்சார சபைக்கு தாம் பெரும் தொகையை செலுத்த தவறியுள்ளதாக அரசாங்கம் பொய்யான செய்திகளை பரப்பி தமக்கு எதிராக சேற்றை வாரி வீசுவதாக தெரிவித்தார்.
“எனக்கு கொழும்பில் வீடு இல்லை. எனவே வீடு கேட்டு எழுத்து மூலம் கோரிக்கை வைத்துள்ளேன். கிடைத்தவுடன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவேன். இதற்கிடையில், நான் எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்திவிட்டேன்ஹ என ஜயசேகர எம்.பி. சுட்டிக்காட்டினார்.
அப்போது அமைச்சர் விஜேசேகர, “இப்போது குறைந்த கட்டணத்தில் எரிபொருளை வழங்கக்கூடிய ஒருவர் உங்களிடம் இருந்தால், அதுபற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அந்த நிறுவனத்திடமிருந்தும் எரிபொருளை வாங்க முடியுமா என்று பார்ப்போம். பொதுமக்கள் பணத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய மூன்று மாதங்கள் கிடைக்கும். அந்த காலக்கெடுவை மீறி பொதுமக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துகிறீர்கள். யாருடைய மின்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அமைச்சர் என்ற முறையில் என்னால் தீர்மானிக்க முடியாது. நேற்று மகசீன் சிறைச்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எனக்கு அழைப்பு வந்தது. அப்போது மீண்டும் மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றோம். இதை நாம் எப்போதும் செய்ய முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த விஷயத்தை நாங்கள் உங்களுக்கு நீண்ட காலமாக தெரியப்படுத்தியுள்ளோம், மேலும் பல கடிதங்களையும் அனுப்பியுள்ளோம். கட்டணம் செலுத்தாத வேறு எம்.பி. இல்லை. இந்த மட்டுமே செலுத்தாமல் உள்ளிர்கள்ஹ என்றார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் விஜேசேகரவின் கருத்து தவறானது எனத் தெரிவித்தார். அரசாங்கமும் அதன் ஊடகங்களும் தமக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரூ.600,000 இற்கும் அதிகமான இந்த நிலுவைத் தொகையானது அவரது தனிப்பட்ட கொடுப்பனவுகள் அல்ல எனவும், அவர் இலாகாக்களை வகித்த மூன்று அமைச்சுக்களால் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் எனவும் ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்களிடம் ஏற்கனவே பேசி உள்ளதாகவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்களான ரிச்சர்ட் பத்திரன மற்றும் அதாவுட செனவிரத்ன ஆகியோரின் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாக ஜயசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியை துறந்த பின்னரும் நாமல் ராஜபக்ஷ போன்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் ஜயசேகர குறிப்பிட்டார்.