மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளை உடைத்து அங்கிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்ற 23 வயதுடைய இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (03) கைது செய்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளில் பெறுமதியான பொருடக்கள் தங்க ஆபரணங்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் நாவலடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து ரைஸ்குக்கர் ஒன்று, தங்க ஆபரணமும், பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று, ரைஸ்குக்கர் 20 ஆயிரம் ரூபா பணமும், செம்மண்ஓடை பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து காஸ் சிலிண்டர் ஒன்று, மணிக்கூடு, 20 ஆயிரம் ரூபா பணமும், நாவலடி பகுதியில் அப்பிள் கையடக்க தொலைபேசி ஒன்று, சம்சுங் கையடக்க தொலைபேசி ஒன்றும் 70 ஆயிரம் ரூபா பணமும் திருடிச் சென்ற நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனை ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்ததுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.