கார் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, கார் வாங்க வந்தவர்களின் பணத்தை பறித்துப் கொண்டு தப்பிச்சென்ற 3 இளைஞர்கள் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (29) இந்த சம்பவம் நடந்தது.
புத்தளம், முந்தல் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், கார் விற்பனை தொடர்பான இணையத்தள விளம்பரமொன்றை பார்வையிட்டுள்ளார். அந்த காரை வாங்க விரும்பி, உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார்.
இரு தரப்பும் பேசிக் கொண்டபடி, நேற்று முன்தினம் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இராணுவ நலன்புரி நிலையத்திற்கு அருகில் இரு தரப்பினரும் சந்தித்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் வாங்க விரும்பிய இளைஞன் ரூ.10 இலட்சம் முன்பணத்தையும் எடுத்து வந்திருந்தார். துணைக்காக மேலும் 2 நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார்.
முந்தல் இளைஞன் காரின் ஆவணங்களை சரிபார்த்தார். காரின் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனை காரணமாக பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அப்போது காரை விற்பனை செய்ய வந்தவர்கள் முந்தல் இளைஞரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, விற்பனை செய்ய தயாராக வந்த அதே காரில் ஏறி தப்பி சென்றனர்.
இது தொடர்பில் இளைஞர்கள் வவுனியா பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்
தப்பியோடிய குழு பயணித்த கார் குறித்து சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் நெடுங்கேணி பொலிஸாரால் ஒட்டுசுட்டான் வீதியில் வைத்து இந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.
பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்கள் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த, 22 மற்றும் 21 வயதுடையவர்கள்.
விற்பனை செய்யப்படவிருந்த காரில் கொளாறு ஏற்பட்டு, வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், காரின் உரிமையாளரைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.