கடந்த செப்ரெம்பர் 11ஆம் தேதி வடசென்னை பகுதிகளில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளைச் செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியைச் சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதியுதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக செயல்பட்டவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் செப்ரெம்பர் 27 க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.