சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77 வது கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது கூட்டத்தொடரில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பும் நீண்டகால நட்புறவுக்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியதாகவும், இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் சிறந்த ஒத்துழைப்பை தொடர உறுதியளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஹ்மத் அல் சயீக், இலங்கையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீடுகள் மற்றும் விமான இணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகள் குறித்து விவாதிக்க அமைச்சர் அலி சப்ரியை அழைத்தார்.
மேலும், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தையொட்டி, நேபாள வெளிவிவகார செயலர் பாரத் ராஜ் பௌத்யால், அலி சப்ரியை நியூயோர்க்கில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இரு பிரிவினரும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் வரலாற்று உறவுகளில் வேரூன்றிய நேபாள-இலங்கை உறவுகளின் எதிர்காலப் பாதை குறித்து விவாதித்தனர்.
இதேவேளை, இன்று பிற்பகல் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வில் இலங்கையின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வழங்க உள்ளார்.
அமர்வின் உயர்மட்டப் பிரிவு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி திங்கட்கிழமை முடிவடையும்.
ஐக்கிய நாடுகள் சபையின் 77வது அமர்வில் இலங்கைக் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகிறார்.
இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.