இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களினால், திருகோணமலை தமிழ் மக்கள் அநாதரவாகியுள்ளனர். திருகோணமலை நிலம் பறிபோய்க்கொண்டிருக்கிறது என திருகோணமலையை சேர்ந்த குழுவொன்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நேற்று (18) வவுனியாவில் நடைபெற்றது.
இதன்போது, திருகோணமலையை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று, விளக்கமளிக்க வந்திருந்தது.
திருகோணமலைக்கு செயலற்ற எம்.பியொருவர் தெரிவாகியுள்ளதால், மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பே பறிபோகும் நிலையேற்பட்டுள்ள போதும், பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவோ, வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ முடியாமல் உள்ளதை சுட்டிக்காட்டினர்.
இரா.சம்பந்தன் எம்.பியாக இருக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பினால், அதை நாம் எதிர்க்கவில்லை. அவரை விலகும்படியும் வலியுறுத்தவில்லை. ஆனால், மாவட்டத்திற்குரிய செயலூக்கமான பிரதிநிதித்துவம் அவசியம் என சுட்டிக்காட்டினர்.
திருகோணமலை கோணேச்சரர் ஆலய விவகாரம், நில அபகரிப்பு விவகாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிரச்சனைகளை பட்டியலிட்டு, அவை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டுகொள்ளாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி, பிரச்சனைகளை எப்படி சமாளிப்பதென்பது பற்றி அந்தக்குழு ஆராயும்.
அந்த குழுவில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.