சென்னை விருகம்பாக்கத்தில் சினிமா நடிகை ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய ஐ-போன் மாயமான நிலையில் நடிகையை காதலிப்பதாக கூறி சுற்றி வந்த சினிமா இயக்குனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிக் டாக், இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட் வீடியோக்களில் தனது நடிப்பு மற்றும் நடனத்திறமையை காண்பித்ததால் தமிழ் திரை உலகிற்குள் நுழைந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்கிற தீபா.
தொடந்து சீரியல்களிலும் ராட்சசன், தெறி, துப்பாறிவாளன் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஜெசிகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்து அமேசான் ஓடிடியில் வெளியான ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்தார்.
ஆந்திர மாநிலம் சத்தியவேடை பூர்வீகமாக கொண்ட ஜெசிகா, பட்டப்படிப்பு முடித்த கையோடு சினிமா ஆசையில் நான்காண்டுகளுக்கு முன்பாக சென்னை வந்து விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி சினிமாவில் நடித்து வந்தார்
இந்த நிலையில் அவர் தங்கி உள்ள வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் தங்கி இருக்கும் நடிகையின் வீடு பூட்டி உள்ளதாகவும், பலமுறை கதவை தட்டியும், கதவை திறக்கவில்லை எனவும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது நடிகை பௌலின் ஜெசிகா துப்பட்டாவால் ஜன்னலில் தூக்கிட்டபடி சடலமாக கிடந்தார்.
நடிகையின் உடலை மீட்ட கோயம்பேடு போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த போலீசார், ஜெசிகாவின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், “ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். எனது காதல் கைக்கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.” எனவும் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நடிகை பெளலின் ஜெசிக்கா, சினிமா உதவி இயக்குனர் சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.
அவர் தான் நடிகை தங்கி இருந்த வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு சென்று உடனடியாக பார்க்கும்படி கூறியதாகவும் அதன் பின்னர் தான் நடிகை ஜெசிகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததால் காதலன் சிராஜிதீனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக பௌலின் ஜெசிகாவை காதலித்து வந்த சிராஜிதீன் விரைவில் ஜெசிகாவை நாயகியாக வைத்து படம் எடுக்க போவதாக ஆசைவார்த்தை கூறி ஜெசிக்காவோடு நெருங்கி பழகி ஏமாற்றியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஜெசிகா, சம்பவத்தன்று சிராஜிதீனுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதற்க்கிடையே தனது தங்கை பயன்படுத்தி வந்த ஐ-போனை காணவில்லை எனவும், சிராஜிதீனின் நண்பர் அதை எடுத்துச் சென்று விட்டதாக அவரது சகோதரர் குற்றச்சாட்டி உள்ளார்