தெஹிவளை மல்வத்தை வீதியில் இராணுவத்தினரின் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி என்ற போர்வையில் பொதுமக்களிடம் பணம் வசூலித்த லான்ஸ் கோப்ரல் உட்பட நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் பணத்தில் உயிரிழந்த போர்வீரர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதாக தெரிவித்து பொதுமக்களிடம் நிதி வசூலித்து வருகின்றனர்.
இராணுவ வீரர் சீருடையில் இருந்த நிலையிலேயே பல நாட்களாக இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இராணுவ நபர் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து சுமார் 20,000 ரூபாவை வசூலித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் வசம் இருந்த 1050 ரூபா பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
34 வயதான லான்ஸ் கோப்ரல் கரந்தெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மற்ற மூன்று சந்தேக நபர்களும் தெஹிவளை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். .