ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக பாடசாலை பைகளை முழுமையாக பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்படும் என இன்று (7) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தும் முயற்சியில் பெருமளவிலான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதேவேளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்திற்கு ஆட்படுவதற்கான போக்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகமும் இவ்வாறான கவலைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
விவாதத்தில் கலந்து கொண்ட எமது மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், ஐஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு செல்வதை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும், புழக்கத்தை தடுப்பது கடினமான பணி எனவும் தெரிவித்தார்.