பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கடந்த 2ஆம் திகதி வெலிகந்த – புல்லியாரடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்ற மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்தி வந்த நிலையில் வைத்தியர் கைதாகியுள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி காரில் பயணித்த குறித்த வைத்தியர் மோட்டார் சைக்கிளுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
வெலிகந்த, அசேலபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நுவன் சாந்த என்ற இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து இடம்பெற்ற போது அவ்வழியாகச் சென்ற லொறி சாரதி ஒருவர், காரின் இலக்கத்தை வெலிகந்த பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.
இதன்படி, மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்கள அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த கார் வைத்தியருக்கு சொந்தமானது என வெலிகந்த பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




