வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, கணவன் தற்கொலை செய்துள்ளார்.
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவெல பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு நடந்துள்ளது.
கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கடந்த 31ஆம் திகதி டுபாயில் இருந்து திரும்பி வந்து தாய் வீட்டில் இருந்த போது கணவனால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4ஆம் திகதி இரவு மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தறுத்து கொலை செய்த கணவன், நேற்று (5) சம்பவம் நடந்த வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த பெண், டுபாயிலுள்ள வைத்தியசாலையொன்றின் பணியாளராக 2019ஆம் ஆண்டு நாட்டிலிருந்து சென்றார். அவர் கணவருக்கு தெரியாமலே நாட்டிலிருந்து சென்றுள்ளார்.
கணவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக பிள்ளைகளிற்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, தான் தற்கொலை செய்யவுள்ளதாக கூறிவிட்டே, தற்கொலை செய்துள்ளார்.