நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் பெரும் களேபரம் இடம்பெறுவதாகவும், பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் தவறானவை என்பதை தமிழ் பக்கம் உறுதி செய்துள்ளது.
இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும், 20 பேர் வரையில் தலைமறைவாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்று (5) காலை வரை யாரும் கைது செய்யப்படவில்லையென்பதை நெல்லியடி பொலிசார் உறுதி செய்தனர். குறிப்பாக எந்த நபரையும் கைது செய்ய தேடுதல் நடத்த முறைப்பாடு கிடைக்காமலிருந்ததாகவும், நேற்று 3 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறானவை.
துன்னாலை கிழக்கு, தெற்கு (குடவத்தை) பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரிற்கிடையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கைகலப்பு இடம்பெற்று வருகிறது. எனினும், ஊடகங்களில் குறிப்பிட்டபடி அது கிராம மோதல் அல்ல. இரண்டு தரப்பிலும் அனேகர் உறவினர்களே.
அங்கு இளைஞர்கள் சிலர் மோதிக் கொள்வதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் அங்கு சென்ற போது, இளைஞர்கள் தப்பியோடி விட்டனர். விசேட அதிரடிப்படையினருக்கும் பொலிசார் தகவல் வழங்கியிருந்தனர். விசேட அதிரடிப்படையினரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்த மோதலின் போது இரண்டு, மூன்று வீட்டு கூரைகளின் மீது கல்லெறியப்பட்டிருந்தது. இதனால் கூரைகளில் சிறிய வெடிப்புக்கள் ஏற்பட்டன. அதை தவிர வெறெந்த சொத்து சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
சில ஊடக செய்திகளை போல வீடுகள் எரிக்கப்பட்டிருக்கவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்படி பொலிசார் அறிவுறுத்திய போதும், நேற்று வரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை. நேற்று 3 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் நேற்று வரை பொலிசாரால் யாரையும் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ முடியாமலிருந்தது.
எனினும், முதற்கட்ட தகவலின்படி, பருத்தித்துறை பகுதியில் நடந்த பிறந்தநாள் நிகழ்வொன்றிற்கு சென்று வரும் போது, இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் ஒருவர் தாக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாகவே, இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே மோதிக் கொண்டனர். இது கிராம மோதல் அல்ல.