நாட்டை கடன் நெருக்கடியில் இருந்து மீட்பது போன்று அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் வீழ்ச்சியடையாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (1) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலதன சந்தைப் பிரிவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட கடன் வசதியை (EFF) வழங்குவதற்கு ஊழியர்கள் மட்ட கலந்துரையாடலில் உடன்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட இந்த கடன் வசதி 48 மாத ஒப்பந்தத்திற்கு உட்பட்டு வழங்கப்பட உள்ளது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“நாம் முதன்முறையாக நாட்டை திவாலானதாக அறிவித்த நேரம் இது. நடுத்தர காலத்தில் திவால்நிலையிலிருந்து மீள்வதும், கடன் நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதும், மேலும் அனைவரின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கைமுறையில் மேலும் சரிவைத் தடுப்பதும் முக்கியம்.
ஆரம்பம் கடினமாக இருக்கும். ஆனால் இது மிகவும் முக்கியமானது மற்றும் நாம் முன்னேறுவதில் வளர்ச்சியை அடைய முடியும். இது நம் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான படியாகும். நமக்குக் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் மட்டும் நாங்கள் உறுதியாக இருக்கவில்லை. அந்த இலக்குகளுக்குப் பின் நாம் முன்னேற வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நம் மனதை மாற்றுவோம். சமூக நலப் பணிகளை மேற்கொள்வது எளிதாகும்” என்றார்.
நமது மானத்தைக் காக்கும் பொருளாதாரம் நமது நாட்டில் இருந்தது. “நாம் ஒரு தேசமாகவும் தனிமனிதனாகவும் கடனில் இருந்து விடுபட வேண்டும்” என்பது பௌத்த மதத்துடன் ஒத்துப்போகிறது. மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் கொள்கையாகவும் அதுவே இருந்தது. அதைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார்.