வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (30) இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, பிரான்ஸ் தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களது நேற்றைய போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
அதன்வரிசையில் C’est nous les Tamouls, பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக கவனயீர்ப்பு பேரணி நிகழ்வினை முன்னெடுத்திருந்தன.
தலைநகர் பரிசின் மொம்பர்னாஸ் பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு தொடங்கிய நீதிக்கான பேரணி நாடாளுமன்ற முன்றல் அன்வலிட் பகுதியினை சென்றடைந்திருந்தது.
எங்கே என் அக்கா, என் அப்பா, என் அண்ணா என பல்வேறு சொற்கொட்டுக்களை தாங்கிய பதாதைகளுடன் பயணித்த பேரணியில் பயணித்த பொய்க்கால் உயர்ந்த மனிதன், பல்லினமக்களின் கவனத்தினையும் ஈர்த்திருந்தான்.பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட திடலில் பேரணி நிறைவு பெற்றிருந்தது.