25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

ரணிலில் மன்னிப்பில் பல நிபந்தனைகள்: ரஞ்சன் 7 வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிட முடியாது!

வெலிக்கடை சிறைச்சாலையில் நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் நேற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அடுத்த 7 வருடங்களிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது.

“ரஞ்சன் ராமநாயக்க 34 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளார், இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு அரசியலமைப்பின் 34 (2) வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று நீதி அமைச்சின் அதிகாரி ரகித ராஜபக்ச  தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய ரஞ்சன், மக்கள் ஆணையின் ஊடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து இறப்பதற்கு முன்னர் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ராமநாயக்க சுமார் 01 வருடமும் 07 மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மன்னிப்பு மற்றும் சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு வசதி செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தை தொடருவேன் என உறுதியளிக்குமாறு நீதியமைச்சர் கலாநிதி ராஜபக்ஷ என்னிடம் கோரியதாக தெரிவித்தார். எனவே, ஊழலுக்கு எதிராக போராட எனக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று நம்புகிறேன்.

தாம் எப்போதும் கசப்பான உண்மையையே பேசுவதாகவும், மக்கள் பக்கம் எப்பொழுதும் நிற்பதாகவும் ரஞ்சன் மேலும் தெரிவித்தார். மேலும் தனக்கு மன்னிப்பு வழங்க உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி விக்ரமசிங்க நேற்று (26) கையொப்பமிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் முழு நீதித்துறையையும் விமர்சிக்கும் வகையில் அல்லது இழிவுபடுத்தும் வகையிலான எந்தவொரு அறிக்கையையும் ராமநாயக்க வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ரஞ்சனின் விடுதலைக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கா 2017 ஓகஸ்ட் 21 அன்று, அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டார். உச்ச நீதிமன்றம் 2021 ஜனவரி 12 அன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வியாழன் (25) நீதிமன்றத்தில் வாக்குமூலமொன்றை சமர்ப்பித்த ரஞ்சன் ராமநாயக்க, 2017 ஓகஸ்ட் 21ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியில் தாம் வழங்கிய கூற்றை ஆழமாக ஆராய்ந்து பார்க்கையில், தாம் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானதும், இழிவானது மற்றும் அவமதிப்புக்குரியது என ஒப்புக்கொண்டார். ஆழ்ந்த மன்னிப்பு மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறையின் மன்னிப்பு கோரினார்.

மேலும், 2017 ஆகஸ்ட் 21ஆம் திகதி தாம் வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறப் போவதில்லை எனக் கூறி, உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தாம் கூறிய கருத்துக்காகவும் ராமநாயக்க மன்னிப்பு கோரினார்.

அவர் ஒட்டுமொத்த நீதித்துறையையும் விமர்சிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு அறிக்கையையும் தனது வாழ்நாள் முழுவதும், இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார்;

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலின் முதலாவது வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (26) விடுதலையான பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை மீண்டும் வலியுறுத்தினார்.

ராமநாயக்க நேற்று (26) பிற்பகல் 2.45 மணியளவில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலில் இருந்து வெளியே வந்தார். ரஞ்சன் ராமநாயக்கவை வரவேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவின் நண்பர்கள் வருகை தந்திருந்தனர்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஊக்குவிப்புக்கான தூதுவராக ராமநாயக்கவை நியமித்துள்ளார். “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர்” என்று அழைக்கப்படும் பதவி ஒரு தன்னார்வ பதவியாகும். ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடங்கிய கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக சிறைச்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க நீதியமைச்சிற்கு சென்றிருந்த நிலையில், தேவையான ஆவணங்களை தயாரித்து ராமநாயக்கவை விடுவிக்க சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஆனது.

சிறைவாசத்தின் போது சிறைச்சாலையில் இருந்து தனது உயர்கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான அவரது கோரிக்கைக்கு ராமநாயக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மனிதஉரிமை மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் வெளிவாரி பாடநெறியின் விரிவுரைகளுக்கு ஒன்லைனில் கலந்துகொண்டார்.

கடந்த ஜூன் 4ஆம் திகதி ரஞ்சன் தனது இளங்கலைப் பட்டப்படிப்பின் முதலாம் ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றியதோடு, சிறைச்சாலைத் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் இந்தப் பரீட்சைக்குத் தோற்றினார்.

முதலில் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஞ்சன், முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று (26) விடுவிக்கப்படும் வரை சிறைச்சாலை வைத்தியசாலையில் கைதியாக இருந்துள்ளார். அவரும் கடந்த 17ஆம் திகதி கொழும்பு சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கிற்கு சிறை அதிகாரிகளின் பாதுகாப்பில் தான் நடித்த ‘தி கேம்’ படத்தைப் பார்க்கச் சென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment