ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை, ரிக்ரொக் பிரபலம் சோனாலி போகட் (42) கொலை செய்யப்பட்டுள்ளது. உறுதியாகியுள்ளது.
சோனாலி போகட்ர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி., வெப் தொடர்களில் நடித்தார். மாடலாகவும் இருந்தார். ரிக்ரொக்கிலும் பிரபலமானார். 2020ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார்.
மேலும், பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார் சோனாலி போகட். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட் டது. ஆனால், அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினர்.
சோனாலி மரணமடைவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பாக தன்னுடைய தாயாருக்கு போன் செய்து, ‘எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. சாப்பிட்ட பிறகு அசவுகரியமாக உணர்கிறேன்இ உதவியாளர் சுதிர் சஹ்வான் உணவில் ஏதோ கலந்து விட்டார்’ என்று பேசியதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சகோதரர் ரிங்கு தத்தா கூறுகையில், “உதவியாளர் சுதிர் சங்வான் 3 ஆண்டுகளின் முன் போதை மருந்து கலந்த உணவைத் தனக்கு கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுவதாக சோனாலி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். தனது சொற்படி நடக்காவிட்டால் வீடியோவை சமூகவலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார். எனது அரசியல் மற்றும்நடிப்புத் தொழிலை அழித்து விடுவேன் என சுதிர் சங்வான் மிரட்டுகிறார். எனது செல்போன்கள், சொத்துப் பதிவுகள், ஏடிஎம் அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து உள்ளார்” என்று சோனாலி போகட்தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சோனாலி போகட்டின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடற்கூராய்வு பரிசோதனை கோவாவில் நடைபெற்றது. இந்த ஆய்வில் தான், தற்போது அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொலை வழக்காக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு தத்தா கொடுத்த புகாரின் பேரில், சோனாலியின் உதவியாளர்களான சுதீர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கோவா ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறுகையில், ‘‘ கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்திர் சிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
அப்போது சோனாலியை அவர்கள் கட்டாயப்படுத்தி குளிர்பானம் ஒன்றை குடிக்க வைத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்’’ என்றார்.
இதன் பின்னர், சோனாலி நடக்க முடியாமல் தள்ளாடும் நிலையில் உதவியாளர் சுதிர் சங்வான் அவரை கைத்தாங்கலாக அழைத்து செல்லும் சிசிரிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது.
#CCTV footage of a resort in #Goa indicates #SonaliPhogat in inebriated condition. She was held by her PA #SudhirSangwan @thetribunechd #SonaliPhogatDeath #SonaliDeathMystery #SonaliPhogatDeathMystery #SonaliPhoghat #Sonali pic.twitter.com/F1wk2vgirJ
— Deepender Deswal (@deependerdeswal) August 26, 2022
போதை ஏறிய நிலையில் சோனாலியை இருவரும் கழிப்பறைக்கு கொண்டு சென்று, 2 மணித்தியாலங்கள் அங்கேயே இருந்துள்ளனர். இதன் பின்னரே சோனாலி இறந்ததாக கூறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அத்துடன் சோனாலி படப்பிடிப்பிற்காக கோவா செல்வதாக, உதவியாளர் சுதிர் சங்வான், சோனாலியின் உறவினர்களிடம் தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு எந்த படப்பிடிப்பும் இல்லையென்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், சோனாலியை கொலை செய்ய கோவா அழைத்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், சோனாலி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனாலி போகட்டின் இறுதி சடங்குகள் ஹரியாணா மாநிலம் ஹிசாரில் நேற்று நடந்தது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.