மட்டக்களப்பு, வாகனேரியில் ‘சாமியை கட்டுவதில்’ ஏற்பட்ட முரண்பாடு முற்றி, ஆலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சாமியை கட்டி, அருள்வாக்கு சொல்பவரை சோதிக்கும் வழக்கம் விபரீதமாகி, நேற்று (25) இரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரியில் உள்ள திரௌபதி அம்மன் ஆலய சடங்கின் இரண்டாம் நாளான நேற்று இரவு, கசிப்பு அருந்திவிட்டு, கத்தியுடன் நுழைந்த நபர், ஆலய நிர்வாகத்தினரை வெட்ட முயன்றுள்ளார்.
தாக்குதலாளி நேற்று முன்தினம் ஆலயத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் பிரபல்யமான அம்மன் வழிபாட்டில் பல்வேறு சடங்குகள் உள்ளன. வழிபாட்டின் போது பலர் சாமியாடுவது வழக்கம். கடவுள் அந்த நபருக்குள் இறங்கி, அவர் மூலமாக அருள்வாக்கு சொல்வதாக பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது.
ஆலய சடங்குகளில் சாமியாடுவது எப்படி தவிர்க்கவியலாத அங்கமோ, அதை போலவே ‘சாமியை கட்டிப் போடுவதும்’, அதை ‘வெட்டுவதும்’ ஒன்றுடன்ஒன்று கலந்தவை.
சாமியாடி அருள்வாக்கு சொல்பவர் உண்மையிலேயே’கடவுள்இறங்கி’த்தான் சாமியாடுகிறாரா அல்லது நடிக்கிறாரா என்பதை கண்டறிய, அங்கு ‘சாமியை கட்டிப்போடுவது’ நிகழ்கிறது.
ஆலயங்களில் ஒருவர் சாமியாடுவது, ஆலய பூசாரியினால் கடவுள் இறக்கப்படுவதால் நிகழ்வதாக நம்புகிறார்கள். ஊரில் உள்ள மந்திரம் தந்திரம் தெரிந்தவர்கள், ஆலயத்தில் சாமியாடுபவர்களை ‘கட்டிப்போட்டு’ சோதனை செய்வார்கள். அவர்களின் மந்திர தந்திரத்தில் உண்மையாக கடவுள் இறங்கி சாமியாடுபவர் அப்படியே சிலை போல நின்று விடுவாராம். மீறி ஆடிக் கொண்டிருந்தால், அவர் சீன் பார்ட்டி. சாமியாடுவதாக பொய் கூறுபவர் என அர்த்தம்.
அப்படி ஒருவர் கட்டப்பட்டால், அவரில் இறங்கிய கடவுள் வெளியேற்றப்பட்டு விட்டார் என அர்த்தம்.
இந்த சமயத்தில்தான் பூசாரி களமிறங்குவார். மந்திரவாதியால் கட்டப்பட்டவரை, தனது பூசை வழிபாடுகளால் வெட்டி, மீண்டும் அந்த நபரில் கடவுளை இறங்க வைப்பார். அப்படி செய்தாலே பூசாரி. அப்படி முடியாவிட்டால்அவரை சக்தி மிக்க பூசாரியாக யாரும் கருத மாட்டார்கள்.
வாகனேரி, குளத்துமடுவில் உள்ளது திரௌபதியம்மன் ஆலயம். ஆலயத்தின் மூன்று நாள் சடங்கு நடந்து வருகிறது.
சடங்கின் முதல் நாளில், சாமியாடிய சிலர் மந்திரித்து கட்டப்பட்டுள்ளனர். அப்போது கூட்டத்திற்குள்ளிருந்த ஒருவர், மந்திரிக்கும் போது சிலரால் அவதானிக்கப்பட்டு, சாமியாடுபவர்களை கட்ட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
தர்க்கம் முற்றிய நிலையில், மந்திரித்ததாக கூறப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சடங்கின் 2ஆம் நாளான நேற்று இரவு, தாக்கப்பட்டவர் ஆலயத்திற்கு வந்துள்ளார். அவர் கசிப்பு அருந்தி விட்டு கத்தியொன்றையும் எடுத்து வந்திருந்தார்.
ஆலய நிர்வாகத்தினரை தாக்கும் நோக்கத்துடன் அவர் சென்றதாக கருதப்படுகிறது.
ஆலய வளாகத்தில் களேபரம் ஏற்பட்டதை அவதானித்த, முச்சக்கர வண்டியிலிருந்த இளைஞர்கள் சிலர் விரைந்து வந்து, நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர்.
அந்த இளைஞர்கள் மீது கசிப்பு ஆசாமி கத்திக்குத்து நடத்தினார்.
ந.ரமேஸ்காந்தன் (19) என்ற இளைஞனின் நெஞ்சில் கத்திக் குத்திவிழுந்து,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலைமையை சமாளிக்க அவருடன் வந்த மேலும் 2 இளைஞர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.
கத்திக்குத்து நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.