ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் கணக்கில் பதிவிட்ட ஹரின் பெர்னாண்டோ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்-
“எனது அன்பான அரசியல் சகா, ரஞ்சன் நாளை (26) அல்லது திங்கள்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனது மற்றும் மனுஷாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிறப்புப் பணியை ஆற்றிய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கும் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.’ என்று ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, .ரஞ்சன் ராமநாயக்க இன்று (25) நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது வழக்கு தொடர்பாகவும், இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோருவதாக வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அந்த அறிக்கையால் பிரதம நீதியரசர் மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் கூறிய கருத்துக்கள் பொய்யானவை எனவும், அந்த அறிக்கைகளை வாபஸ் பெறுவதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை எனவும் ரஞ்சன் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
12 ஜனவரி 2021, 21 ஓகஸ்ட் 2017 ஆகிய திகதிகளில் அலரி மாளிக்கைக்கு வெளியே அவர் அளித்த அறிக்கைக்காக அவருக்கு எதிராக முதல் வழக்கைத் தாக்கல் செய்த பின்னர் உயர் நீதிமன்றத்தால் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
முதல் அறிக்கையை வாபஸ் பெற மாட்டேன் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தது தொடர்பாக இரண்டாவது வழக்கு தொடரப்பட்டது.