இரத்தினபுரி நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றின் மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த பாடசாலையின் அதிபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அதிகாரசபையின் அவசர உதவி எண்ணுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர உதவி நிலையத்திற்கு கடந்த 12ஆம் திகதி முறைப்பாடு கிடைத்தது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே குறித்த அதிபர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய அமரசிங்க தெரிவித்தார்.
பெற்றோரின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட மாணவனை நிபுணர் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் உண்மைகளை அறிவித்ததையடுத்து, நேற்று (23) சம்பந்தப்பட்ட அதிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையாக இந்தச் சம்பவத்தை அறிமுகப்படுத்த முடியும் எனவும் அந்த பிரிவிற்கு தாம் குறிப்பாக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளின் போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் தொடர்பில் வாய்மூல தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த தலைவர், அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருப்பின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தகவல்களின் இரகசியம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டார். .