மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கிற்கு 1MDB வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை அனுபவிப்பதற்காக, காஜாங் சிறைச்சாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
மலேசியாவின் உச்ச நீதிமன்றமான பெடரல் நீதிமன்றம், அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மீறல் ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப்பின் தண்டனையை உறுதி செய்தது.
நஜிப் வழக்கு ஒரே பார்வையில்-
1MDB என்பது என்ன?
1MDB (1Malaysia Development Berhad).என்பது 2009ஆம் ஆண்டு மலேசியப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட அரசாங்க நிதி.
செல்வந்தர் ஜோ லோவின் துணையுடன் அந்த நிதி உருவாக்கப்பட்டது.
2009 முதல் 2018 வரை நஜிப் மலேசியாவின் பிரதமராக இருந்தார். 1MDB நிதியின் இணை-நிறுவனர். அவர் 2016 வரை அதன் ஆலோசனைக் குழுத் தலைவராகவும் இருந்தார்.
Najib Razak arrives at the Kajang Prison to start his 12-year prison sentence. pic.twitter.com/Dz0sIojhTi
— Raja Petra Bin Raja Kamarudin (@RajaPetra) August 23, 2022
பில்லியன் கணக்கான டொலர் எப்படிக் காணாமல் போனது?
முதலீட்டுத் திட்டங்களில் பயன்படுத்தக் கடன் பத்திரங்களின் வழி பில்லியன் கணக்கான டொலரைத் திரட்டியது 1MDB.
அதில் முறைகேடு இருப்பதாகக் கூறி அமெரிக்க நீதித் துறை விசாரணை மேற்கொண்டது.
சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களுக்கும் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித்துறைவிசாரணையில் தெரிய வந்தது. அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஜோ லோவுக்குச் சொந்தமானவை.
இன்னும் பல பில்லியன் டொலர், கணக்கில் வரவில்லை என்றனர் மலேசிய அதிகாரிகள்.
அவை விலை உயர்ந்த சொத்துகளாகவும் இடங்களாகவும் லோ பெயரிலும் அவரது சகாக்களின் பெயரிலும் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
பின்னர் தலைமறைவான லோ மீது மலேசியாவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவர் அவற்றை மறுத்தார். இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
நஜிபுக்கு எதிரான வழக்குகள்
1MDBயுடன் தொடர்புடைய 1 பில்லியன் அமெரிக்க டொலரைத் நஜிப் சட்டவிரோதமாகப் பெற்றிருப்பதாக மலேசிய அதிகாரிகள் குற்றம்சுமத்தினர்.
ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து 2018ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
அவர் மீது 42 குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவை அனைத்தும் நிரூபணமானால் அவர் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
2020ஆம் ஆண்டு ஜூலையில் 5 வழக்குகளில் முதலாவது விசாரணைக்கு வந்தது.
அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையுடன் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி, கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயன்றது ஆகிய குற்றங்கள் அவர்மீது சுமத்தப்பட்டன.
உயர்நீதிமன்றம் விதித்த அந்தத் தீர்ப்பை எதிர்த்துத் நஜிப் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால் நேற்று (23) உச்சநீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. அதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக இன்னும் 4 வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.