பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த ஹிந்தகல பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது விடுதியின் 6 அறைகளில் 23 மாணவிகள் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
19ஆம் திகதி இரவு சுமார் 7.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
விடுதியை ஒட்டியுள்ள சலூனில் இருந்து தீ பரவியதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ மளமளவென பரவியதால், மாணவர்கள் உயிரைக் காப்பாற்ற அறைகளில் இருந்து வெளியே பாய்ந்துள்ளனர், ஆனால் அவர்களின் மடிக்கணினிகள் உட்பட அனைத்து பொருட்களும் தீயில் சிக்கி எரிந்து நாசமானது.
பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ விஞ்ஞான மற்றும் கலைப் பீடங்களின் இரண்டாம் வருட மாணவிகள் குழுவொன்று இங்கு தங்கியுள்ள நிலையில் புகை மூட்டத்தினால் சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளான மாணவி ஒருவர் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயினால் முற்றாக எரிந்து நாசமான அறையில் இருந்த ஐந்து மாணவிகளின் 5 மடிக்கணினிகள் எரிந்து நாசமானதாகவும், அவர்களின் ஆடைகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் உடமைகள் அனைத்தையும் இழந்த 10 மாணவிகளுக்கு தலா 7,500 ரூபா வீதம் உபவேந்தர் நிதியத்தின் ஊடாக நிதியுதவி வழங்குவதற்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், இது தொடர்பில் கண்டறிய நிபுணர் அறிக்கையை கோர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ விபத்துக்குள்ளான விடுதியைப் போன்று பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான விடுதிகள் தரமற்றவை எனவும் இவை தொடர்பில் முறையான ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.