நானும் என்னுடைய மகனும் எங்கேயாவது வெளிநாடு சென்றால் அண்ணன், தம்பிகளா என்று கேட்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2022) பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியினுடைய காவல்துறை, ஒருங்கிணைந்து நடத்திய “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் ஆர்றிய உரையில், “அனைவருக்கும் அன்பான வணக்கம். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியினுடைய காவல்துறை, ஆங்கில ஊடக்கத்துடன் இணைந்து, “மகிழ்ச்சியான தெருக்கள்” (Happy Streets) என்ற தலைப்பில் தொடர்ந்து மூன்று மாதங்களாக இந்த நிகழ்ச்சியை சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற வாரம் நான் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால், காலையில் திடீரென்று கொரோனா தொற்று எனக்கு ஏற்பட்ட காரணத்தால், நான் வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. ஆனால் அந்தத் தொற்றிலிருந்து இரண்டு, மூன்று நாட்களில் நான் விடுபட்டேன். அவ்வளவு விரைவாக விடுபட்டதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால், என்னுடைய உடல்நலப் பராமரிப்பு அதற்குக் காரணமாக இருந்தது.
எனக்கு வயது 69, கிட்டத்தட்ட 70 வயது. ஆனால் இங்கு இருப்பவர்கள் பார்த்தீர்களானால் நம்ப மாட்டீர்கள். இன்னும் வெளிப்படையாக சொல்கிறேன், நானும் என்னுடைய மகனும் எங்கேயாவது வெளியூர் சென்றால் அண்ணன், தம்பிகளா என்று கேட்பார்கள். நான் இதைப் பெருமைக்காக சொல்லவில்லை, பல நேரங்களில் இது நடந்ததுண்டு. வெளிநாடுகளுக்குச் சென்றபோது அது மாதிரி பல முறை நடந்ததுண்டு. எதற்காகச் சொல்கிறேனென்றால், அந்த மாதிரி நான் என்னுடைய உடல்நலத்தை, எனக்கு எப்போது நேரம் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வதுண்டு.
கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு அழகான கவிதை சொல்வார், சாப்பிடப் பசியோடு போய் உட்கார வேண்டும், பசியோடு எழுந்து வந்துவிட வேண்டும், இதுதான் வாழ்க்கைமுறை என்று அழகான கவிதையை பலமுறை சொல்லியிருக்கிறார்.
எனவே, வயிறுமுட்ட சாப்பிடக்கூடாது. அதற்காகச் சாப்பிடாமலும் இருந்துவிடக்கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நான் காலையில் ஒரு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். அடுத்த நாள் காலையில் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். மாலையில் ஒரு மணி நேரம் 5 கிலோமீட்டர் நடக்கிறேன். இதை, நாள்தோறும் என்னால் செய்ய இயலவில்லை. காரணம், நான் எப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பல நிகழ்ச்சிகளுக்கு, பல ஊர்களுக்கு, பல மாவட்டங்களுக்கு, பல நாடுகளுக்கெல்லாம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அங்கு சென்றாலும், அங்கேயும் வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்த அளவு செய்துவிடுவேன்.
எதற்காக இதைச் சொல்கிறேனென்றால், கொரோனா தொற்றால் பெரிய அளவில் எனக்கு பாதிப்பு வராமல் தடுத்ததற்குக் காரணம், என்ன என்று மருத்துவர்கள் சொன்னது, நீங்கள் உடற்பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால்தான், வந்த அந்தத் தொற்று கூட கடுமையாக உங்களைத் தாக்காமல் அதிலிருந்து உங்களைக் காப்பாற்றியிருக்கிறது என்று சொன்னார்கள்.
ஆகவே, உடல்நலத்தை பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்தால், எந்த நோய் வந்தாலும், எந்தக் கவலைகள் வந்தாலும், எந்த டென்ஷன் வந்தாலும் அதிலிருந்து நாம் சுலபமாக விடுபட்டு விடலாம். ஆகவே, அந்த நல்ல எண்ணத்தோடுதான் இன்றைக்கு நமது பெருநகர சென்னை மாநகராட்சியும், காவல்துறையும், ஆங்கில ஊடகமும் தொண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். நான் இப்படி இருக்கும் என்று நினைத்து வரவில்லை. ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும், சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் அதிக ஆர்வத்தோடு வந்திருக்கிறார்கள்.
இங்கு கிராமப்புற கலை நிகழ்ச்சிகள், மயிலாட்டம், இறகுப் பந்து, கூடைப் பந்து, டேபிள் டென்னிஸ், சைக்கிள் பயிற்சி என்று பல பயிற்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற “மகிழ்ச்சியான தெருக்கள்” நிகழ்ச்சி அனைத்துப் பகுதிகடிளிலும் நடைபெற வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, உடல்நலம் மற்றும் மனநலமும் பாதுகாக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன், அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைச் சொல்கிறேன்.
இதை இன்றோடு விட்டுவிடாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, தினசரி என்று கூட நான் சொல்லவில்லை, தினசரி செய்தால் மிகச் சிறப்பு. ஆனால், சிலருக்கு அந்த வாய்ப்பு கிடையாது. பலர் அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள், பல பணிகள் இருக்கும். அதனால், வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் அதை நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு, உங்களுடைய நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னும் பலமுறை இந்த நிகழ்ச்சிக்கு நான் வருவேன். அப்போதும் உங்களோடு கலந்துகொண்டு உங்களை ஊக்கப்படுத்துவதற்கு, உங்களை ஊக்கப்படுத்துவதைவிட என்னையே ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு நிச்சயமாக நான் வருவேன் என்பதை இந்த நேரத்தில் கூறி, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய சென்னை மாநகராட்சிக்கும். காவல் ஆணையரகத்திற்கும், ஊடக நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்” என்று பேசினார்.