பாலியல் வழக்கில் கர்நாடக நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் மென்பொறியாளர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தங்கியிருந்தார். அப்போது நித்தியானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பந் தப்பட்ட பெண் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் நித்தியானந்தா கடந்த 2010ஆம் ஆண்டு இமாச்சலபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பின் வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகாததால் ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்டு நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில், வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்துள்ளன.
இந்நிலையில் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நித்தியானந்தாவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ராம்நகர் போலீஸார் நித்தியானந்தாவை தேடும்பணியில் இறங்கியுள்ளனர். ராம்நகர் நீதிமன்றத்தின் பிடிவாரன்ட் ஆணையை பிடதியில் உள்ள தியானபீடம் ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் நித்தியானந்தா சமூகவலைதளங்களில் தான் கைலாசா தீவில் இருப்பதாக கூறி பல வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஆனால், கைலாசா எங்கிருக்கிறது என்று இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.
எனவே, நித்தியானந்தாவை எப்படி கைது செய்வது என்பது குறித்து போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். எனினும், பிடதியில் உள்ள தியானபீட ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்கள் அறிய திட்ட மிட்டுள்ளனர்.