கட்டுகஸ்தோட்டை உரகஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் 76 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் இரு பேரன்களை 18ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் அவர்கள் 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலையை செய்த பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு தப்பிச் சென்று மறைந்திருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் ஒரு பவுன் எடையுள்ள தங்க நகையையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு இளைஞர்கள் கொலையுண்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தனர்.
உயிரிழந்த பெண்ணின் பேரப்பிள்ளைகளான சந்தேகநபர்கள் அடிக்கடி பெவீட்டிற்கு வந்து சென்றதாகவும், சம்பவத்தன்று பாட்டியை துணியால் மூச்சுத்திணறி கொன்றுள்ளதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அப்துல் சலாம் சித்தி ரபிகா என்ற பெண் கடந்த 16ஆம் திகதி மதியம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவத்தின் போது குறித்த பெண் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளதுடன் அவரது மகனும் மருமகளும் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தனர்.