26.3 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

வீடுகளிலிருந்து வெளியேறி யாழ் வந்த 17 வயது சிறுமிகளிற்கு நடந்தது என்ன?; காரில் காட்டுக்கு அழைத்துச் சென்றவர்களிடமிருந்து மயிரிழையில் தப்பித்த அதிர்ஷ்டம்!

முல்லைத்தீவு சிறுமிகள் இருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், யாழ்ப்பாணத்தில் 5 ஆண்களுடன் கைதான விவகாரத்தின் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமிகள் இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பை சேர்ந்த 2 சிறுமிகள் வீடுகளை விட்டு வெளியேறிய 17 வயதான இரண்டு சிறுமிகள் யாழ்ப்பாணம் வந்த நிலையில், அவர்கள் பெரும் விபரீதத்தில் சிக்கியிருக்கக்கூடிய அபாயமிருந்த நிலையில், மயிரிழையில் தப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அவர்களுடன் கைதான 5 ஆண்களும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அனேகர் யாழ் நகரிலுள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள் என தெரிய வருகிறது.

நேற்று முன்தினம் (17) அவர்கள் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரத்தின் முன்னர் சிறுமிகள் இருவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, பேருந்தில் பயணித்து யாழ் நகரை அடைந்துள்ளனர்.

அடுத்து என்ன செய்வதென தெரியாத நிலையில், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பொழுதை கழித்துள்ளனர்.

இரவு வேளையில் பேருந்து நிலைய கட்டிடத்தில் இரண்டு யுவதிகள் காத்திருக்கும் விடயத்தை அங்குள்ள ஒருவர், நகரிலுள்ள வாடகை வாகன ஓட்டுனர் ஒருவரிற்கு தெரிவித்துள்ளனர்.

வாடகை வாகன ஓட்டுனர் அங்கு சென்று, வாடகை வாகனம் தேவையா என விசாரித்த போதே,  சிறுமிகள் வீடுகளிலிருந்து வெளியேறி வந்ததையும், செல்வதற்கு இடமில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமிகளை சாவகச்சேரியிலுள்ள விடுதியொன்றில் தங்கும் ஏற்பாட்டை செய்து தருவதாக கூறிய வாடகை வாகன ஓட்டுனர், அவர்களை சாவகச்சேரிக்கு அழைத்து சென்று, விடுதியொன்றில் தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அறையொன்றில் இரண்டு சிறுமிகள் மாத்திரமே தங்கியிருந்துள்ளனர். தமது தோடுகளை அடமானம் வைத்து விடுதி அறை கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.

5 நாட்களின் பின்னர் அவர்களின் பணம் தீர்ந்து விட்டது. பணம் இல்லாமல் அவர்களை தொடர்ந்து தங்கியிருக்க விடுதி உரிமையாளர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து, தம்மை தங்க வைத்த வாடகை வாகன ஓட்டுனரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்திய சிறுமிகள், விடுதியிலிருந்து வெளியேற வேண்டியிருப்பதை தெரிவித்துள்ளனர்.

அவர்களை பிறிதொரு வீட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்வதாக வாடகை வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறுமிகளை ஏற்றிச் செல்ல வாகனத்துடன் சென்றுள்ளார். அவருடன் நண்பர்கள் 4 பேரும் சென்றுள்ளனர். அந்த சிறிய வாகனத்தில் 7 பேரும் பயணிக்க முடியாதென குறிப்பிட்ட சிறுமிகள் வாகனத்தில் ஏறுவதற்கு முதலில் தயங்கியுள்ளனர்.

எனினும், தங்குமிடம் அருகிலேயே உள்ளதாக குறிப்பிட்டு, சமாளித்து செல்லாமென்றும் அவர்கள் சிறுமிகளை சம்மதிக்க வைத்தனர்.

இதன்படி, சிறுமிகள் வாகனத்தில் ஏறிய போது, அவர்களை தமது மடியில் உட்கார வைத்து, அந்த குழுவினர் பயணித்துள்ளனர். இதன்போது, சிறுமிகளுடன் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். வாகனத்தில் சிறுமிகள் சம்மதத்துடன் ஏறிய போதும், தமது விருப்பமின்றியே அந்தக்குழுவினர் எல்லைமீறி நடந்ததாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளை ஏற்றிய வாகனம் கச்சாயிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளது.

வாகனத்திலிருந்தவர்களின் எல்லைமீறிய செயற்பாட்டால் அதிருப்தியடைந்த சிறுமிகளில் ஒருவர் சாதுரியமாக வாகனத்திலிருந்து கீழே இறங்கி, அந்த குழுவினரிடமிருந்து தப்பித்து விட்டார்.

அவர் குடிமனை பகுதிக்கு சென்று, தனக்கு நடந்த கதியை தெரிவித்ததுடன், தனது நண்பி வாகனத்தில் இருப்பதாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

இந்த தகவல் பொலிசாரக்கு வழங்கப்பட்டு, கொடிகாமம் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதற்குள் வாகனத்திலிருந்த சிறுமியுடன் அந்த குழுவினர் காட்டுப்பகுதிக்கு சென்று விட்டனர்.

வாடகை வாகன ஓட்டுனரின் தொலைபேசி இலக்கம் சிறுமியிடம் இருந்ததால், அதன்மூலம் அவரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு பொலிசார் அழைத்தனர். அவர் உடனடியாக அங்கு வந்து விட்டார்.

பின்னர் ஏனையவர்கள் கைது செய்யப்பட், மற்றைய சிறுமியும் மீட்கப்பட்டார்.

வீடொன்றில் தங்க வைப்பதாக குறிப்பிட்டு விட்டு, சிறுமிகளை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர்?, ஏதாவது குற்ற நோக்கங்களின் அடிப்படையில் அவ்வாறு செயற்பட்டார்களா? என்பதை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

ஒருவேளை, குற்ற நோக்கங்களிற்காக காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தால், வாகனத்திலிருந்து ஒரு சிறுமி வெளியேறியது, பொலிசாரின் துரித நடவடிக்கை காரணமாகவே, சிறுமிகள் மயிரிழையில் தப்பித்திருக்கிறார்கள்.

சிறுமிகள் விசாரணை மற்றும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், முன்னதாக செய்திகள் வெளியானதை போல அவர்கள் பாலியல் வல்லுறவிற்கு அளாகவில்லையென்பது தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்கும் படிப்பினையான சம்பவமாகும். வீடுகளில் பிள்ளைகளிற்கு சரியான அரவணைப்பும், முறையான வழிகாட்டுதல்களும் இல்லாமல் போனால், அவர்கள் எடுக்கும் சடுதியான முடிவுகள் எவ்வாறான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு உதாரணமாகும்.

குடும்பங்களில் ஏற்படும் சின்னசின்ன முரண்பாடுகளிற்கெல்லாம் சடுதியான முடிவெடுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகும்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன?: டக்ளஸ் கேள்வி!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிவின் நன்கொடை

east tamil

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

Leave a Comment