பீகார் மாநிலம் பாட்னாவில் 15 வயது சிறுமி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பாட்னாவின் இந்திரபுரி பகுதியில் பீர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிபாரா பகுதியில் புதன்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.
இந்த கொடூரமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணவியை பின்பக்கமாக சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடுகிறார். கழுத்தில் சுடப்பட்ட மாணவி, சுடப்பட்டதைத் தொடர்ந்து தரையில் சரிந்துள்ளார்.
காய்கறி வியாபாரியின் மகளே சுடப்பட்டுள்ளார். அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியின் வீடு சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
தனியார் கல்வி நிலையத்திலிருந்து வீடு திரும்பிய 9ஆம் வகுப்பு மாணவியே சுடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காதல் விவகாரம் தொடர்பானது என்றும், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலன் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவி தனியார் கல்வி நிறுவனத்தை மாற்றியதால் முன்னாள் காதலர் கோபமடைந்து, இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக மாணவி வேறு தனியார் கல்வி நிறுவனமொன்றிற்கு சென்று படிப்பது வழக்கம். அங்கு ஒரு இளைஞனுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டு, மாணவி தொடர்பை துண்டித்து விட்டார்.
பின்னர் அந்த மாணவி வேறு தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்ல தொடங்கினார். இதனால் கோபமடைந்த அவரது முன்னாள் காதலன் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
Bihar| A vegetable vendor’s daughter shot yesterday in Indrapuri locality of Sipara area of Beur PS in Patna. Injured girl who was shot in the neck is undergoing treatment in a private hospital. Matter is being said to be a love affair: Patna Police
(Visuals: CCTV footage) pic.twitter.com/kHbddcU2L1
— ANI (@ANI) August 18, 2022
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பீர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அதுலேஷ் குமார் தெரிவித்தார்.
”மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் ஜக்கன்பூரில் வசிப்பவர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளியின் படம் பதிவாகியுள்ளது. முன்னாள் காதலன் சிறுமியைத் துரத்துவதைக் காணலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் தலையில் சுட முயன்றதைக் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் சிறுமி முன்னால் சென்றதால், தோட்டா அவரது தோளில் தாக்கியுள்ளது. தலையில் சுடப்பட்டிருந்தால், சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம்” என்றார்.