29.9 C
Jaffna
April 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

சீனாவின் கடன்பொறியிலிருந்து தப்பிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பது மட்டுமே ஒரே வழி: கஜேந்திரகுமார் எம்.பி!

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழி இருக்கின்றது. தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசுக்கு இன்று இருக்கக்கூடிய வருமானத்தை விட புலம்பெயர் தமிழ் மக்களுடைய வருமானம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் உலகில் மிகப் பலமான நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் அந்த அரசுகளுக்கு சுமையாக இல்லாமல் மிகச் சிறந்த ஒரு சமூகமாக இருக்கின்றனர்.அந்த மக்களின் உதவிகளை முதலீடுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

இந்த கடன் இல்லாமல் நாடு இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவும் தமிழ் மக்களின் உரிமையை கொடுக்கக் கூடாது என்கின்ற இனவாத போக்கை கடைபிடிக்கின்ற சித்தாந்தமே இருக்கின்றது. சர்வதேசரீதியில் இருக்கக்கூடிய கடன் சுமைகளை மேற்கத்திய மற்றும் இந்திய நாடுகளுடன் இணைந்து ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத்தை நிலைக்கு கொண்டு வரலாம் என கனவு காண்கின்ற நிலையில் தான் இலங்கை இருக்கின்றது

இதுவரை காலமும் தமிழரை அழிக்க சீனாவின் காலில் விழுந்த நிலையை விட்டு தற்போது மேற்கத்திய மற்றும் இந்தியாவின் காலில் விழுகின்ற போக்கை சீனா பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை என்று நிலையில் சீனா தான் கொடுத்த கடனில் இருந்து இலங்கையை தப்பவிடாது.

சீனாவின் கப்பல் வருவதற்கு முதல் நாள் உளவு பார்ப்பதற்கென இந்தியா தன்னுடைய விமானத்தை இலங்கைக்கு வழங்கி இலங்கைத் தீவிலுள்ள பூகோளப் போட்டியை இன்னும் தீவிரமடைகின்ற நிலைமை உருவாக்கி இருக்கிறதே தவிர இந்த நடவடிக்கைகள் எதுவுமே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கக்கூடிய விடயம் அல்ல. மாறாக இருக்கக்கூடிய மக்களுக்கும் கடும் பாதிப்புகளையும் சவால்களையும் கொடுக்கின்ற நிலைமை தான் உருவாக்கும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்வது, இந்த நிலைமையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, 74 வருடங்களாக ஒற்றை ஆட்சி என்கிற அடிப்படையிலேயே நியாயமற்ற தோற்றுப் போன கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கின்றதனால் வரக்கூடிய விளைவுகளை சிங்கள மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களிடையே பிரிவுகள் ஒன்றும் இல்லாமல் உள்நாட்டிலே நாங்கள் எங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கக்கூடிய ஒவ்வொரு தேசங்களையும் ஏற்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகினால் நாங்கள் இந்த பூகோளப்போட்டியில் எங்களுடைய நன்மைக்காகவும் பொது நன்மைக்காகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். அதை செய்யத் தவறினால் வெளி சக்திகள் தங்களுடைய தேவைகளை அடைவதற்கு எங்களுடைய பிரிவுகளை பயன்படுத்துகின்ற நிலைமையே தொடர்ந்து காணப்படும்.

தமிழ் மக்களுடைய உரிமைகளை வழங்கக்கூடாது. தமிழ் தேசம் இலங்கை தீவில் இருப்பதை அங்கீகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் இன அழிப்புக்குரிய போரை நடத்தி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்பை அழிப்பதற்கு தமிழ் மக்களையும் சேர்த்து அழிக்கின்ற வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசுக்கு உதவி தேவைப்பட்டது. அதில் முதலாவது ஆயுத தேவைக்கான நிதி, இரண்டாவது அரசியல் ரீதியான பாதுகாப்பு அதாவது சர்வதேச மட்டத்திலிருந்து வரக்கூடிய அழுத்தத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உதவியும் தேவைப்பட்டது.

இலங்கையில் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், சீனா தன்னுடைய முத்துமாலை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் பட்டுப்பாதை வேலைத்திட்டத்தை செய்வதற்கும் இலங்கை தீவில் விருப்பம் கொண்டிருந்தது.சீனா வழமையாக ஒரு நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற போது அந்த நாட்டிற்குள் இருக்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கமாட்டார்கள்.
சீனாவால் கிடைக்கின்ற உதவிகளைப் பெற்று இனவழிப்பு நடவடிக்கையை செய்வதற்கெடுத்த முடிவின் விளைவே இன்று சீனாவின் கப்பல் வருகையாகும்.

சீனாவினது செயற்பாடு இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளி விட்டுள்ளது. தனது பெயரை இலங்கைத் தீவில் தவிர்க்க முடியாதபடி கண்ணை மூடிக்கொண்டு கடன்களை வழங்கி, இலங்கை உண்மையில் கடனை கட்டலாமா என்பதை ஆய்வு செய்யாமலேயே அதற்கு மாறாக கடன்களை வழங்கினார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழி இருக்கின்றது. தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும் – என்றார்.

இதையும் படியுங்கள்

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

இந்த ஆண்டு மாகாணசபை தேர்தல் நடக்காது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

Pagetamil

ஏப்ரல் 21 இன் முன் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் பலர் அம்பலமாவார்கள்: ஜனாதிபதி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!