பாடசாலைச் சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை காணொயிளாக படம் பிடித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், காலி, உனவடுன, மாதரம்ப பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள மதகுரு, தான் கைது செய்யப்படுவதை தடுக்க ரூ.10 கோடி வரை இலஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக கொடுக்கவும், அவரிடம் கோடிக்கணக்கான ரூபா பணம், சொத்துக்கள் எப்ப கிடைத்தன என்றும் அறிய, சட்டவிரோத சொத்துக் குற்ற விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலஞ்சத்தை ஏற்காமல், அழுத்தமின்றி இரகசியப் பொலிஸார் செயற்பட்ட விதம் பாராட்டுக்குரியது எனவும், சந்தேகத்திற்குரிய மதகுரு கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் இரகசியமாகச் சம்பாதித்துள்ள சொத்துக்கள் தொடர்பிலும் பொதுமக்கள் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகின்றமை பாராட்டத்தக்கது என்றும் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சந்தேகநபரான மதகுரு பயன்படுத்திய பல கையடக்கத் தொலைபேசிகள் உள்ளதாகவும், டிஜிட்டல் தடயவியல் கணினிப் பிரிவு அந்த தொலைபேசிகளின் தரவுகளைக் கண்காணித்து வருவதாகவும், அந்தத் தரவுகளின் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் பணிபுரியும் உயர் பொலிஸ் அதிகாரிகளும், காலி பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் பெற்று, பதவி உயர்வு பெற்று வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்ட அதிகாரிகளும் மதகுருவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த கோவிலுக்கு சில காலமாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், காரணமின்றி வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பிரதேசத்தில் மதகுருவினால் கொள்வனவு செய்யப்பட்ட பல சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதுடன், அவ்வாறான வீடுகளை கொள்வனவு செய்வதற்கு பெருந்தொகை பணத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்றும், வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் அவர் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் குறித்தும் ஆராய்வதாகவும் அவர் கூறினார்.