கையடக்க தொலைபேசி மூலம் ஏற்பட்ட அறிமுகத்தினால் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் 2 சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்வி நடவடிக்கைக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட கையடக்க தொலைபேசியில் சிறுமி ஆபாச படங்களை பார்த்துள்ளார். பின்னர், அதன் ஊடாக பலரது அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் அயலில் வசிப்பவர்கள், அறிமுகம் அற்றவர்கள் என 7 பேர் சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளனர்.
லக்கல பிரதேசத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வரும் இந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருபவர்.
சிறுமியின் வறுமை மற்றும் சமூக விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் யாரும் இந்த விடயம் பற்றி அக்கறை காண்பிக்கவில்லை.
ஆரம்பத்தில் வீட்டில் யாருமில்லாத நிலையில், மேற்படி நபர்கள் வீட்டுக்கு வந்து சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளனர். பின்னர், வீட்டில் ஆட்கள் இருந்த போதே அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. லக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி.ஏ.ரணவீர, சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதி பொலிஸ் பரிசோதகர் கயானி பண்டார உள்ளிட்ட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சிறுமி தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 19 மற்றும் 39 வயதுடைய லக்கல கலேய பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் பற்றிய தகவல்கள் வெளியாகி அவர்களைக் கைது செய்ய பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.