நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய சில ஊடகங்களின் பிழையான வெளிப்படுத்தல்களே இந்த நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் என்ற ஒன்று ஏற்பட காரணமாக இருந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி இலங்கையர்களாக நாம் வாழ வேண்டும். 69 லட்சம் மக்களின் வாக்கை பெற்ற ஜனாதிபதி கோத்தாபய தன்னை நம்பிய அந்த மக்களை பட்டினி போட்டதன் விளைவாக அவர்கள் இட்ட சாபமும், பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையுமே இன்று அவரை இந்த நிலைக்கு ஆட்கொண்டுள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
பாதைகள், மின்சார வசதிகள், குடிநீர் இணைப்புக்கள் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற மிகப் பின்தங்கிய அம்பாறை வீரகெட திஸ்ஸபுர பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு “ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம்” வேலைத்திட்டத்தின் கீழ் வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சநாராம விகாரையில் வைத்து உலருணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்விலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இலங்கையில் பிறந்த கோத்தாபய இலங்கையில் வாழ முடியாமல் இன்று அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றார். அவர் மக்களிடமிருந்து கொள்ளையடித்த மக்களின் பணத்தை மக்களுக்காக செலவழித்து விட்டு அவரது சொந்த நாட்டுக்கு வந்து வாழ வேண்டும். அவரை யாருமே நாட்டை விட்டு ஓடும்படி கேட்கவில்லை. மாறாக அவரது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் படிதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால் மக்கள் வரியையும் செலுத்திக்கொண்டு வாக்களித்து விட்டு இன்று வாழ்க்கையை தொலைத்துவிட்டு எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கிறார்கள். இந்த நிலை மாற கிராம மட்டத்திலிருந்து மாற்றம் வரவேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கல்முனை சுமத்திராரம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சநாராம விகாராதிபதி திஸ்ஸானந்தபுர திஸ்ஸாநாம தேரர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கதிரமலை செல்வராசா, எஸ்.எல்.டீ.பி. கொள்கைப்பரப்பு செயலாளர் யூ.எல்.என். ஹுதா, ஊடகவியாளர் சபேசன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.