அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் இந்த வாரம் சோதனையிட்ட FBI முகவர்கள், அங்கிருந்து உயர் இரகசிய ஆவணங்களை எடுத்திருப்பதாக தெரிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி 2021 ஜனவரியில் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருந்தபோது வெள்ளை மாளிகையில் இருந்து இரகசிய பதிவுகளை அங்கீகாரமில்லாமல் வீட்டிற்கு கொண்டு சென்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஏழு பக்க பெடரல் நீதிமன்ற ஆவணத்தின்படி, சில ஆவணங்கள் “உயர் இரகசியம்” என்று பெயரிடப்பட்டதாகவும், “சிறப்பு அரசு வசதிகளில் மட்டுமே கிடைக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கோப்புகளில் அணு ஆயுதங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இருப்பதாக விசாரணைக்கு நெருக்கமான அடையாளம் தெரியாத நபர்களை மேற்கோள் காட்டி வோஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
எனினும், ட்ரம்ப் அதனை நிராகரித்தார். “அணு ஆயுத விவகாரம் ஒரு புரளி” என்று அவர் கூறினார், மேலும் FBI “தகவல்களை விதைக்கிறது” என்று வலியுறுத்தினார்.
அவரது வீட்டில் இருந்து 20 பெட்டிகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதில் புகைப்படங்கள், கைப்பட எழுதப்பட்ட குறிப்புகள், ட்ர்ம்ப் தமது சகாவான ரோஜர் ஸ்டோனுக்கு வழங்கிய மன்னிப்புக் குறிப்பு ஆகியவை அதில் இருந்ததாகக் கூறப்பட்டது.
“பிரான்ஸ் ஜனாதிபதி” பற்றிய தகவலும் அதில் இருந்ததாய்க் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து மேல்விவரங்கள் இல்லை.
அமெரிக்க உளவுத்துறைச் சட்டம் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ட்ரம்ப்பின் வீடு சோதனையிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ட்ரம்ப் கூறுகிறார்.
அவரது குடியிரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
அமெரிக்கக் காவல்துறையும் நீதித்துறையும் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர்களில் சிலர் குறைகூறினர்.




