சீன உளவுக் கப்பலான யுவாங் வாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நேற்று ( 12) அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணத்தை இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுவாங் வாங் 5 இப்போது திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஓகஸ்ட் 16 அன்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும்.
முன்னதாக, ஓகஸ்ட் 11 ஆம் திகதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியதால் இது தாமதமானது.
“இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை இந்த பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் கப்பல் திடீரென பாதை மாறியது. இருப்பினும், அது மீண்டும் ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்தது. கப்பல் குறித்த கவலை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்காலும் எழுப்பப்பட்டது. திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது, அவரது வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டது.அதே செய்தியை செவ்வாயன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய இராஜதந்திரிகளுக்கு தெரிவித்தார்.
இரு தரப்பினரும் “உறுதியான காரணங்களை” முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது. கப்பலை நிறுத்துவது இலங்கை அரசாங்கத்திற்கு புவிசார் அரசியல் தலைவலியாக மாறியுள்ளது. கப்பலை நங்கூரமிடுவதற்கான அனுமதியை ஜனாதிபதி விக்கிரமசிங்க பதவியேற்பதற்கு முன்னர் இலங்கையின் வெளியுறவு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை வழங்கியிருந்தன.
ஆனால், கொழும்பிடம் விளக்கம் கேட்கும் வரை, இந்தியாவிற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையில், கப்பல் பயணத்தை அனுமதிக்காவிட்டால் நாடு கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அரசாங்கத்திற்கு விளக்கமளித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.