கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் வியாபார நடவடிக்கை முடித்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்தி தாக்கப்பட்டதுடன் கடையை திறக்க வைத்து 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் குறித்த நபர் வியாபார நடவடிக்கைகளை முடித்து நேற்று இரவு வீடு சென்றுகொண்டிருந்த போது பன்னங்கண்டி பகுதியில் வைத்து வானில் வந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளார்.
வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரை வானில் ஏற்றி நீண்ட நேரம் வானில் வைத்து தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் நகைக்கடைக்கு அழைத்து சென்று கடையை திறக்குமாறு மிரட்டி அங்கிருந்து 10 பவுண் தங்க நகைகளை எடுத்துச் சென்ற நிலையில் கடை உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அங்கேயே விட்டு செல்லப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் உறவினர்களின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.