கடந்த வியாழன் அன்று அவரது பிராம்டன் டிரைவ்வேயில் பட்டப்பகலில் ஒரு நபர் கொடூரமாக தாக்கப்பட்டு கோடரி மற்றும் கத்தியால் வெட்டப்பட்டதை அடுத்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் ஃபதே ரேடியோவின் உள்ளூர் பஞ்சாபி தொகுப்பாளர் ஜோதி சிங் மான் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் ஏன் குறிவைக்கப்பட்டார் என்பது தற்போது தெரியவில்லை.
ஓகஸ்ட் 4 ஆம் திகதி காலை 8:16 மணிக்கு பிராம்ப்டனில் உள்ள ஹுரோன்டாரியோ தெரு மற்றும் மேஃபீல்ட் சாலை பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக, தமக்கு அறிவிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
“போலீசார் அப்பகுதிக்குச் சென்று, பலத்த காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணை மீட்டனர், அவர் ஒரு அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று ஒரு அறிக்கையில் போலீசார் தெரிவித்தனர்.
“அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது” என்ன குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலின் வீடியோ கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
முகக்கவசம் அணிந்த கருப்பு உடை அணிந்த ஒருவர் திடீரென ஜீப்பின் சாரதி இருக்கை ஜன்னலை கோடரியால் உடைத்தபோது ஜோதி சிங் மான் வெள்ளை ஜீப்பில் ஏறி கதவை மூடுவது காட்சியில் பதிவாகியுள்ளது.
தாக்குதலாளிகள் வாகனத்திலிருந்துஅவரது காலால் இழுத்து, இரக்கமின்றி கோடரி மற்றும் கத்தியால் வெட்டியுள்ளனர்.
அயலிலுள்ள பெண்ணொருவர் கண்டு, உதவிக்குரல் எழுப்பியதையடுத்து தாக்குதலாளிகள் தப்பியோடினர்.