சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வந்துள்ளதாக வர்த்தகர் வீட்டுக்குள் சிஐடிவேடத்தில் நுழைந்த திருடர்கள், வர்த்தகரின் சொத்து விபரம் பற்றி விசாரணை நாடகம் ஆடி, கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டிலிருந்த ரூ.2 கோடி ரூபா பெறுமதியான தங்கம், பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று (08) காலை, கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு சிஐடியினரை போல வேடமிட்டு வந்த இருவர், பணம் மற்றும் நகை வைக்கப்பட்டுள்ள இடங்களை நூதனமாக அறிந்து, திருட்டில் ஈடுபட்டனர்.
சிஐடி உத்தியோகத்தர்கள் பாணியில் வெள்ளைச் சட்டை, கருப்பு காற்சட்டை அணிந்தபடி நேற்று காலை 11 மணியளவில் இருவர், டைல்ஸ் விற்பனை செய்யும் வர்த்தகரின் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒருவர் தனது கையில், கைவிலங்கை வைத்திருந்தார்.
அப்போது வர்த்தகர் வீட்டில் இருக்கவில்லை.
வர்த்தகரின் மனைவியும், இளம்பெண் ஒருவருமே வீட்டில் இருந்தனர். தம்மை சிஐடியினர் என தெரிவித்து, வர்த்தகரை விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்து, வர்த்தகரிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி வீட்டுக்கு வருமாறு அழைக்கும்படி தெரிவித்துள்ளனர்.
வந்தவர்கள் உண்மையிலேயே சிஐடியினர் என நம்பிய மனைவி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர்த்தகரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வர்த்தகர் வீட்டிற்கு வந்ததும், தம்மை சிஐடியினர் என தெரிவித்து, சட்டவிரோதமாக சேமிக்கப்பட்ட சொத்து பற்றி விசாரிக்க வந்ததாக தெரிவித்து, வர்த்தகரை விசாரணைக்குட்படுத்தினர்.
வர்த்தகரின் வாக்குமூலத்தை பதிவும் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தி, அந்த நேரத்தில் வீட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் பற்றிய தகவலை பெற்று, விசாரணை ஏட்டில் பதிவு செய்தனர்.
2 மணித்தியால விசாரணையின் பின்னர், சொத்து பற்றிய முழுமையான தகவல்களையும் பெற்ற பின்னர், அவர்கள் திருடர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
கைத்துப்பாக்கியை காண்பித்து, அவர்களை சுட்டுவிடுதாக மிரட்டியுள்ளனர். அங்கிருந்த இளம்பெண்ணை வீட்டின் முன்பகுதியில் கதிரையில் கட்டி வைத்துள்ளனர். யுவதியிடம் கைத்தொலைபேசி உள்ளதா என்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
விசாரித்து குறிப்புகளை வைத்திருப்பது எப்படி என காட்டியுள்ளனர்.
அப்போது போலீஸ் வேடத்தில் வந்தவர்கள் திருடர்களாக மாறியுள்ளனர்.
கணவன், மனைவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி முனையில் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி 75 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள், ரூ.25 இலட்சம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற காரின் பின்பகுதியில் பணம், நகைகளை ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர். காரை செலுத்தி வந்தவர், திருடர்கள் இருவரும் பணம், நகையை காரில் ஏற்றுவதற்கு உதவவும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.