அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களை விதித்துள்ள போதிலும் நாட்டில் கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி கூறுகிறது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, பொலிஸாரின் கூற்றுப்படி மே மாதம் முதல் இதுவரை 23 கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தில் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனைய குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்டங்களை விதித்துள்ள போதிலும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் யுத்தமோ வன்முறையோ இல்லை, மாறாக அரசியல் போராட்டமே நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதியிடம் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும்,; பொருளாதார மறுமலர்ச்சியை துரிதப்படுத்தவும் உறுதிசெய்யவும் மட்டுமே அவசரகால விதிமுறைகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.




