இலங்கைப் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்து மக்கள் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்திருந்தது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு மணி நேரமும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 181 நாட்களில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மத்திய வங்கியின் தரவுகள் இதனை குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோத படகுப்பயணங்கள் மூலம் தமிழகத்திற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் செல்பவர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.
உடல் ரீதியான துஷ்பிரயோகம், சுரண்டல், நீண்ட வேலை நேரம், மனித உரிமை மீறல்கள், சம்பளம் இல்லாமை அல்லது குறைவான ஊதியம், மரணம் மற்றும் அங்கவீனம் போன்ற அபாயங்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு வேலைகளைப் பெறும் பெண்களும் ஆண்களும் இந்த ஆண்டில் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த வருடம் ஜூன் மாதம் வரையான ஆறு மாதங்களில் ஒவ்வொரு நாளும் 777 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலப்பகுதியில், 140,701 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு கட்டுமானப் பணி, பணிப்பெண்களாக சென்றுள்ளனர்.
பெரும்பாலான இலங்கையர்கள் இப்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அல்லது வேலை முகவர்களின் தலையீடு இல்லாமல் தாங்களாகவே வெளியேறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை வெளியேறியவர்களின் எண்ணிக்கை (140,701), நடந்த ஆண்டு முழுவதும் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். கடந்த ஆண்டில் 117,952 பேர் நாட்டிலிருந்து வெளியேறினர். 2021 ஆம் ஆண்டின்ஜனவரி முதல் ஜூன் வரை 30,757 பேர் வெளிநாடு சென்றிருந்தனர்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையின் மிகப்பெரிய நிகர அந்நிய செலாவணி ஈட்டுபவர்களாக இருப்பதோடு, வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்வதன் மூலம் தேசிய வேலையின்மை விகிதத்தையும் செயற்கையாகக் குறைவாக வைத்திருக்கின்றனர்.
ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1.61 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.576.02 பில்லியன்) அனுப்பியுள்ளனர்.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதம், வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் திறைசேரி 274 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளது.