மியான்மர் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கமின்றி நடந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கைதான இரண்டு மொடல் அழகிகளுக்கும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் நன்கறியப்பட்ட மினாய்மர் மொடல் அழகிகளான நாங் ம்வே சான் (Nang Mwe San) மற்றும் தின்சார் வின்ட் கியாவ் (Thinzar Wint Kyaw) ஆகியோரே சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அவர்கள் “மியன்மார் கலாச்சாரம் மற்றும் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகைப்படங்களை பணத்திற்கு விநியோகித்துள்ளனர்” என மியான்மர் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ சதிப்புரட்சியை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து, மியான்மரின் “பாரம்பரிய கலாச்சாரத்தை” தக்கவைக்க விரும்புவதாக இராணுவ ஆட்சிக்குழு கூறி வருகிறது. இதன் விளைவாக, ஒன்லைனில் உள்ளடக்கம் மற்றும் பல பொழுதுபோக்குத் துறைகளில் தணிக்கைக்கு வரும்போது நிறைய ஒடுக்குமுறைகள் உள்ளன. குறிப்பாக பெண்கள் தொடர்பான மிகப்பழமையான அணுகுமுறையை இராணுவ அரசு கொண்டுள்ளது.
நங் ம்வே சான் மற்றும் தின்சார் வின்ட் கியாவ் ஆகிய அழகிகள் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர். ஆபாச புகைப்படம், வீடியோக்களை பணம் செலுத்தி பார்வையிடும் எக்ஸ்-ரேட்டட் தளங்களான ஒன்லி ஃபான்ஸ் மற்றும் எக்ஸான்ட்ரியாவின் ஊடாக தமது அந்தரங்க புகைப்படங்களை பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இதுவே ”மியான்மர் பெண்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடக்கம் இல்லாமல்” மொடல்கள் நடந்து கொண்டதாக அதிகாரிகளை குற்றம் சாட்ட வைத்துள்ளது.
அந்தரங்க வீடியோக்களை ஒன்லைனில் வெளியிட்டதற்காக, கலாச்சாரத்திற்கும் கண்ணியத்திற்கும் தீங்கு விளைவித்ததார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு மொடல்களும் மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டனர்.
இப்பொழுது ‘அடக்கம் இல்லாத பெண்களிற்கு’ 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் பெண்களிற்கு அவமானம் ஏற்படுத்தும் மற்றும் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இதே போன்ற வயது வந்தோருக்கான தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட மற்றவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
34 வயதான நாங் ம்வே சான் 3 வருடங்களின் முன்னர் ஏற்கெனவே ஊடகங்களில் பிரபலமானவர். அவர் மருத்துவராக பணிபுரிந்தபடி, சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் 2019ஆம் ஆண்டில் மியான்மர் மருத்துவ கவுன்சிலால் அவரது மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது.
35 வயதான தின்சார் வின்ட் கியாவ் கிளர்ச்சியாளர்களால் ஆளப்படும் ஒரு இனப் பகுதிக்கு சென்ற போது, கவர்ச்சிப்படங்களை வெளியிடுபவர் என குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.