இந்தியாவின் கடும் அழுத்தத்தைத் தொடர்ந்து யுவான் வாங் 5 கப்பலின் வருகையை காலவரையின்றி தாமதப்படுத்துமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுள்ளதாக AFP தெரிவித்துள்ளது.
யுவான் வாங் 5 ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து,. 17 ஆம் திகதி வரை அங்கே தரித்து நிற்க திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதியை இலங்கை வழங்கியிருந்தது.
எனினும், இலங்கையின் இந்த முடிவிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியா தனது அதிருப்தியை நேரடியாக தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இது ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலாக சீனா குறிப்பிடுகிறது. ஆனால் இந்திய தரப்பின் தகவலின்படி, இது ஒரு இரட்டை பயன்பாட்டு உளவுக் கப்பல் ஆகும். இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதலில் பயன்படுத்தப்படுகிறது.
“இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று புது டில்லியின் வெளியுறவு அமைச்சு கடந்த வாரம் கூறியது.
இந்திய உயர் அதிகாரி ஒருவர் AFP இடம் இன்று கூறுகையில், “இந்த பயணத்தை தொடர வேண்டாம் என இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
“யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை ஒத்திவைக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்பட்டபோது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.