லிந்துலை, லோகி தோட்டத்தில் வீடொன்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை 16 மணித்தியால போராட்டத்தின் பின் மயக்கமடைய செய்யப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
நாய் ஒன்றை வேட்டையாட வந்த சிறுத்தைபுலி தோட்ட வீடொன்றின் கூரையில் பாய்ந்த போது, வீட்டின் கூரையை உடைத்து வீட்டின் படுக்கையறையில் சிறுத்தை விழுந்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 10 மணியளவில் சிறுத்தை வீட்டுக்குள் வீழ்ந்துள்ளது.
சிறுத்தை வீட்டுக்குள் விழுந்ததும், வீட்டிலிருந்தவர்கள் வெளியே ஓடிவந்து, வீட்டு கதவை தாளிட்டனர்.
வீட்டின் உரிமையாளர் எஸ்.சுரேஷ் சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அவர் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு 10.40 மணியளவில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது, மிக மோசமான வானிலை நிலவியது. பெரிய சத்தம் கேட்டது. டோர்ச் லைட்டை ஒளிரச் செய்தபடி வீட்டுக்குள் சென்றபோது, புலி ஒன்று எனது கழுத்தை நோக்கி பாய்ந்தது. இதில் காயமடைந்த போதும், மனைவி, பிள்ளைகளுடன் வீட்டுக்கு வெளியே ஓடிவந்து கதவை தாளிட்டேன் என்றார்.
ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலையின் கால்நடை மருத்துவர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், சிறுத்தையை பிடிக்க 16 மணித்தியாலங்களாக பெரு மயற்சி செய்தனர்.
சிறுத்தை தப்பிச் செல்ல முடியாதவாறு வீடு சுற்றிலும் அடைக்கப்பட்டது.
வீட்டிற்குள் பதற்றத்துடன் உலாவிக் கொண்டிருந்த சிறுத்தைக்கு பெரும் பிரயத்தனப்பட்டு மயக்க மருந்து செலுத்தி பிடித்து, பாதுகாப்பு கூண்டில் வைத்து எடுத்துச் சென்றனர்.
லோகி தோட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரவில் தோட்ட வீடுகளுக்கு இரை தேடி வருவதாகவும், தோட்ட தொழிலாளர்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்களை பிடித்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவமும் அப்படியான ஒன்றே.
மயக்க மருந்து செலுத்தப்பட்டு பிடிபட்ட மலைப் புலியை பொருத்தமான சூழலுக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நுவரெலியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-மலையக நிருபர் எம்.பிரியா-