லுணுகம்வெஹர, பதவ்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது பிள்ளைகளுடன் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லுணுகம்வெஹெர பிரதேச செயலக உத்தியோகத்தரான யு.எஸ். டி. திலின பிரசாத் என்பவரே கொல்லப்பட்டார்.
லுணுகம்வெஹர பிரதேசத்தில் பல திருட்டு மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாகவும் அவருடன் கொலையாளியின் தந்தை மற்றும் சகோதரனும் வந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக லுனுகம்வெஹர பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகம்வெஹெர கும்புருயவில் உயிரிழந்தவரின் எருமைகளை சந்தேகநபர் திருட முயன்றதாகவும், அதை உரிமையாளர் தடுத்த போது முரண்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, உயிரிழந்தவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
லுணுகம்வெஹர பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் வந்து எருமைகளை விடுவித்ததாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தவர் தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் உணவருந்திக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்த போதிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது கமராக்கள் அணைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த மூவரில் பிரதான சந்தேக நபரின் தந்தை லுனுகம்வெஹர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்